வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்
1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குறைந்தது பன்னிரண்டு பதிப்புகளில் ஜெர்மன் மொழியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் முதன்முதலாக 1850-இல் லண்டன் நகரத்துச் சிவப்புக் குடியரசுவாதி (Red Republican)[3] பத்திரிக்கையில் வெளியானது. இந்த மொழிப்பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மக்ஃபர்லேன் (Helen Macfarlane). 1871-இல், அமெரிக்காவில் குறைந்தது மூன்று வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு முதன்முதலில், 1848-ஆம் ஆண்டு ஜூன் எழுச்சிக்குச்[4] சிறிது காலத்துக்கு முன்பாகப் பாரிசில் வெளியானது, அண்மையில் நியூயார்க் நகரத்து சோஷலிஸ்டு (Le Socialiste)[5] பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதலில் ஜெர்மன் மொழியில் வெளிவந்த சிறிது காலத்திலேயே போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியானது. அறுபதுகளில் ருஷ்ய மொழிபெயர்ப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. முதன்முதலில் வெளியாகிய குறுகிய காலத்துக்குள்ளேயே டேனிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது.
ஆனாலும் அறிக்கையானது[7] ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜூன் 24, 1872.
1882-ஆம் ஆண்டின் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது. அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலகல் (Kolokol)[8] இதழின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலை நாட்டினரால் அப்போது அதில் (அறிக்கையின் அந்த ருஷ்யப் பதிப்பில்) ஓர் இலக்கிய ஆர்வத்தை மட்டுமே காண முடிந்தது. அத்தகைய ஒரு கண்ணோட்டம் இன்று சாத்தியமற்றது.
அறிக்கையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை எடுத்துக்கூறும் கடைசிப் பிரிவு, அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) பாட்டாளி வர்க்க இயக்கம் இன்னும்கூட எவ்வளவு குறுகிய களத்தினில் செயல்படுவதாக இருந்தது என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ருஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை பற்றிய தகவல்கள் இப்பிரிவில் விடுபட்டுள்ளன. அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாக ருஷ்யாவும், குடியேற்றத்தின் மூலம் ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி சக்திகளை ஈர்த்துக் கொள்ளும் நாடாக அமெரிக்க ஐக்கிய நாடும் இருந்துவந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின. அதே வேளையில், ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்களின் விற்பனைச் சந்தைகளாகவும் விளங்கின. ஆகவே அக்கால கட்டத்தில் இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வகையில் அன்றைய ஐரோப்பிய அமைப்பின் ஆதாரத் தூண்களாகத் திகழ்ந்தன.
இன்று நிலைமை எப்படி மாறிவிட்டது! ஐரோப்பியக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவின் மிகப்பெரும் விவசாயப் பொருளுற்பத்திக்குக் காரணமாக அமைந்தது. இந்த உற்பத்தி உருவாக்கிய போட்டியோ இன்று ஐரோப்பாவிலுள்ள சிறிதும் பெரிதுமான நிலவுடைமையின் அடித்தளங்களையே உலுக்கி வருகின்றது. அத்தோடு, இதுநாள்வரை நிலவிவந்த, மேற்கு ஐரோப்பாவின், குறிப்பாக இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகத்தை வெகுவிரைவில் தகர்த்துவிடும் அளவுக்கு அத்தனை ஆற்றலோடும், அவ்வளவு பெரிய அளவிலும், அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறை மூலாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தக் குடியேற்றம் சாத்தியம் ஆக்கியுள்ளது. இவ்விரு நிலைமைகளும் அமெரிக்க நாட்டின் மீதே புரட்சிகரமான முறையில் எதிர்வினை ஆற்றுகின்றன. அரசியல் அமைப்பு முழுமைக்கும் அடிப்படையாக விளங்கும், விவசாயிகளின் சிறிய, நடுத்தர நிலவுடைமைகள், மிகப்பெரும் பண்ணைகளின் போட்டிக்குப் படிப்படியாகப் பலியாகின்றன. கூடவே, தொழிலகப் பிரதேசங்களில் பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியத்தகு மூலதனக் குவிப்பும் முதன்முறையாக வளர்ச்சிபெற்று வருகின்றன.
இப்போது ருஷ்யாவைப் பாருங்கள்! 1848 – 49 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது ஐரோப்பிய முடியரசர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினரும்கூட, அப்போதுதான் விழித்தெழத் தொடங்கியிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க, ருஷ்யத் தலையீடுதான் ஒரே தீர்வு என நம்பினர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். இன்றைக்கு, அவர் புரட்சியின் போர்க் கைதியாக காட்சினாவில் (Gatchina) இருக்கிறார்.[9] ருஷ்யாவோ, ஐரோப்பாவில் புரட்சிகர நடவடிக்கையின் முன்னணிப் படையாகத் திகழ்கிறது.
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?
இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 21, 1882.
1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:
அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்[ஏ1].
[ஏ1] ”என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை[10] உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப்போவது நிச்சயம்” என்று, ஆங்கில மொழிபெயர்ப்பின் முகவுரையில் நான் எழுதினேன். “நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புருசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்.” [1890 ஆண்டு ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்.
ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன், ஜுன் 28, 1883.
1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
தொழிலாளர்களுடைய சங்கமான “கம்யூனிஸ்டுக் கழகத்தின்” (Communist League) வேலைத்திட்டமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்காகவே இருந்த கம்யூனிஸ்டுக் கழகம் பின்னாளில் சர்வதேச அமைப்பாக ஆயிற்று. 1848-க்கு முன்பு [ஐரோப்பா] கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளின் காரணமாக, இக்கழகம் தவிர்க்க முடியாதவாறு ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. வெளியிடுவதற்கென ஒரு முழுமையான, கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த கட்சி வேலைத்திட்டத்தைத் தயாரித்து அளிக்கும்படி, 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கழக மாநாட்டில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பணிக்கப்பட்டனர். 1848 ஜனவரியில் ஜெர்மன் மொழியில் தயாரித்து அளித்த கையெழுத்துப் பிரதியை, பிப்ரவரி 24-இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சிக்குச் சில வாரங்களுக்கு முன்னால் லண்டன் அச்சகத்தாருக்கு அனுப்பி வைத்தனர். 1848 ஜூனில் நிகழ்ந்த எழுச்சிக்குச் சற்று முன்னதாகப் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று பாரிசில் வெளியாயிற்று. மிஸ் ஹெலன் மாக்ஃபர்லேன் (Miss Helen Macfarlane) மொழிபெயர்த்த முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு, 1850-இல் லண்டனில் ஜார்ஜ் ஜூலியன் ஹார்னியின் (George Julian Harney) ’சிவப்புக் குடியரசுவாதி’ (Red Reoublican) பத்திரிகையில் வெளியானது. ஒரு டேனிஷ் பதிப்பும், ஒரு போலிஷ் பதிப்பும்கூட வெளியாகியுள்ளன.
பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது பெரும் போராக, 1848 ஜூனில் வெடித்த பாரிஸ் எழுச்சிக்கு ஏற்பட்ட தோல்வியானது, ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்களைச் சிறிது காலத்துக்கு மீண்டும் பின்னிலைக்குத் தள்ளியது. அதன்பிறகு, மேலாதிக்கத்துக்கான போராட்டம், பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பிருந்ததைப் போலவே, மீண்டும் சொத்துடைமை வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலே மட்டும் நடைபெறும் போராட்டமாக ஆனது. தொழிலாளி வர்க்கம், அரசியல் புகலிடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், நடுத்தர வர்க்கத் தீவிரக் கொள்கையினரின் தீவிரவாதப் பிரிவின் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் எங்கேனும் தென்படுமாயின், அவை ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டன. இப்படித்தான் பிரஷ்யப் போலீசார் அப்போது கொலோன் (Cologne) நகரில் அமைந்திருந்த கம்யூனிஸ்டுக் கழகத்தின் மையக் குழுவை வேட்டையாடினர். மையக் குழுவின் உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பதினெட்டு மாத சிறைவாசத்துக்குப்பின், 1852 அக்டோபரில் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தனர். புகழ்பெற்ற இந்த “கொலோன் கம்யூனிஸ்டு வழக்கு விசாரணை”[11] அக்டோபர் 4 முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது. சிறைக் கைதிகளில் ஏழு பேருக்கு மூன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை கோட்டைச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட உடனேயே, எஞ்சியிருந்த உறுப்பினர்கள் கம்யூனிஸ்டுக் கழகத்தை முறைப்படி கலைத்துவிட்டனர். அதன்பிறகு அறிக்கையின் கதியோ, கேட்பாரற்றுக் கிடந்தழியும் என்றே தோன்றியது.
ஆளும் வர்க்கங்கள் மீது மற்றுமொரு தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் மீண்டும் பெற்றபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உதித்தெழுந்தது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க பாட்டாளி வர்க்கம் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இச்சங்கத்தால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனப்படுத்த இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், ஃபிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon)[12] ஆதரவாளர்களும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களும் (Lassalleans)[ஏ2] ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பரந்த வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
[ஏ2] லஸ்ஸால் (Lassalle)[13] எங்களிடம் தனிப்பட்ட முறையில் எப்போதும் தம்மை மார்க்சின் சீடர் என்றே கூறி வந்துள்ளார். அதன்படி அவர் அறிக்கையின் கோட்பாடுகளுக்கு இணங்கவே செயல்பட்டார். ஆனால் 1861-64 ஆண்டுகளில் அவர் நடத்திய மக்கள் கிளர்ச்சிகளில், அரசுக் கடன் உதவியுடன் நடத்தப்படும் கூட்டுறவுத் தொழிற்கூடங்களைக் (Co-operative Workshops) கோரியதற்கு அப்பால் செல்லவில்லை. [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
அனைத்துத் தரப்பினரும் மனநிறைவுகொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை வரைந்து கொடுத்த மார்க்ஸ், தொழிலாளி வர்க்கத்தின் அறிவுநுட்ப வளர்ச்சியில் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். அத்தகு வளர்ச்சி, ஒன்றிணைந்த செயல்பாடு, பரஸ்பரக் கலந்துரையாடல் ஆகியவற்றின் நிச்சயமான விளைவாகும். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நேரடி நிகழ்வுகளும், சாதக பாதகச் சூழ்நிலைகளும், வெற்றிகளையும்விட அதிகமாகத் தோல்விகளும், மனிதர்களின் அபிமானத்துக்குரிய பல்வேறு சாகச உத்திகள் போதுமானவை அல்ல என்பதை அவர்களின் மனதில் உறைக்கும்படி தெளிவாக உணர்த்தும். அவை தொழிலாளி வர்க்க விடுதலைக்குரிய மெய்யான நிலைமைகள் குறித்து, மேலும் முழுமையான உள்ளார்ந்த புரிதலுக்கு வழிகோலவே செய்யும் என மார்க்ஸ் கருதினார். மார்க்ஸின் எண்ணம் சரியாகவே இருந்தது. அகிலமானது 1874-இல் கலைக்கப்பட்டபோது, அது [தொடங்கப்பட்ட ஆண்டான] 1864-இல் கண்ட தொழிலாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொழிலாளிகளையே விட்டுச் சென்றது. ஃபிரான்சில் புருதோனியமும், ஜெர்மனியில் லஸ்ஸாலினியமும் மறைந்து கொண்டிருந்தன. பெரும்பாலான பழைமைவாத ஆங்கிலேயத் தொழிற்சங்கங்கள் நெடுநாட்களுக்கு முன்பே அகிலத்திலிருந்து தமது தொடர்பைத் துண்டித்துக் கொண்டுவிட்டன. என்றாலும், அவையும்கூடப் படிப்படியாக முன்னேறி, கடந்த ஆண்டு ஸ்வான்சியில் அவற்றின் தலைவர் தனது உரையில் “[ஐரோப்பா] கண்டத்து சோஷலிசத்திடம் எமக்கிருந்த அச்சமெல்லாம் மறைந்துவிட்டது” என்று, அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் அளவுக்கு வந்திருக்கின்றன. உண்மையிலேயே அறிக்கையின் கோட்பாடுகள், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களிடையேயும் கணிசமான அளவுக்குச் செல்வாக்குப் பெற்றுவிட்டன.
அறிக்கை, தானே இவ்வாறு மீண்டும் முன்னிலைக்கு வந்தது. ஜெர்மன் பதிப்பு 1850 முதல் சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மறுபதிப்புகளாகப் பலமுறை வெளியிடப்பட்டுள்ளன. 1872-இல் நியூயார்க்கில் இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உட்ஹல் கிளாஃபிலினின் வாராந்தரி (Woodhull and Claflin's Weekly) இதழில் வெளிவந்தது. இந்த ஆங்கிலப் பதிப்பிலிருந்து ஒரு ஃபிரஞ்சு மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டு நியூயார்க் நகரின் சோஷலிஸ்டு (Le Socialiste) இதழில் வெளியானது. அதன்பிறகு, குறைந்தபட்சம் மேலும் இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள், கூடக்குறையச் சிதைக்கப்பட்ட வடிவில், அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இங்கிலாந்தில் மறுபதிப்பாக வெளியாகியுள்ளது. பக்கூனின் (Bakounine) மொழிபெயர்த்த முதலாவது ருஷ்ய மொழிபெயர்ப்பபு 1863-ஆம் ஆண்டுவாக்கில்[14] ஜெனீவாவில் கெர்த்சனின் கோலகல் (Kerzen’s Kolokol) இதழின் அச்சகத்திலிருந்து வெளியானது. வீரமிக்க வேரா ஸசூலிச் (Vera Zasulich) மொழிபெயர்த்த இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பும்[15] 1882-இல் ஜெனீவாவிலேயே வெளியானது. புதிய டேனிஷ் பதிப்பு ஒன்றை 1885-இல் கோபன்ஹெகனில் வெளியான சமூக-ஜனநாயக நூல்திரட்டு (Social-demokratisk Bibliothek) என்னும் தொகுப்பில் காணலாம். 1885-இல் பாரிசில் சோஷலிஸ்டு (Le Socialiste) இதழில் ஒரு புதிய ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியானது. இதிலிருந்து ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு உருவாக்கப்பட்டு 1886-இல் மாட்ரிடில் (Madrid) வெளியானது. ஜெர்மன் மறுபதிப்புகளுக்கு கணக்கில்லை. மொத்தத்தில் குறைந்தது பன்னிரண்டு இருக்கும். ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்று கான்ஸ்டான்டிநோப்பிளில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவர இருந்தது. ஆனால் அது வெளிவரவில்லை. மார்க்சின் பெயர்தாங்கிய ஒரு புத்தகத்தை வெளியிடப் பதிப்பாளர் பயந்ததும், மொழிபெயர்ப்பாளர் அதைத் தம் சொந்தப் படைப்பாகக் குறிப்பிட மறுத்ததும் காரணமெனக் கேள்விப்பட்டேன். இன்னும் வேறுபல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவற்றை நான் பார்த்ததில்லை. இவ்வாறாக, அறிக்கையின் வரலாறு, நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது அறிக்கையானது, ஐயத்துக்கு இடமின்றி சோஷலிச இலக்கியங்கள் அனைத்தினுள்ளும் மிகப்பரந்த அளவில் செல்வாக்குப் பெற்ற, மிகவும் சர்வதேசத் தன்மை கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. சைபீரியாவிலிருந்து கலிஃபோர்னியாவரை கோடானு கோடி உழைக்கும் மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது. ஃபிரான்சில் காபேயின் (Cabet)[18], ஜெர்மனியில் வைட்லிங்கின் (Weitling)[19] கற்பனாவாதக் கம்யூனிசத்தைத் தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் ஆற்றல் பெற்றதாக விளங்கியது. இவ்வாறாக, 1847-இல் சோஷலிசம் என்பது நடுத்தர வர்க்க இயக்கமாகவும், கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கமாகவும் இருந்தன. சோஷலிசம், குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் ”மரியாதைக்குரியதாக” விளங்கியது. ஆனால், கம்யூனிசம் அதற்கு மிகவும் நேர்மாறானதாக இருந்தது. மேலும், மிகத் தொடக்கத்திலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம், ''தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தாலேயே பெறப்பட வேண்டும்'' என்பதாகும். எனவே, இவ்விரு பெயர்களில் [சோஷலிசம், கம்யூனிசம்] நாங்கள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இருந்திருக்க முடியாது. அதோடு, அப்போதுமுதல் அப்பெயரை மறுதலிக்கும் எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.
என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்.
1872-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து கீழ்க்காணும் பகுதியை இங்குத் தருகிறேன்:
"கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். 1848 முதலே நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது [1872-இல் எழுதப்பட்ட முகவுரையின் ஜெர்மன் மூலத்தில் இந்த வாக்கியங்கள் சற்றே மாறுபட்டுள்ளன. பார்க்க இந்நூலின் பக்கம் 2]; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார்நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது”.
”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. மார்க்ஸின் “மூலதனம்” நூலின் பெரும்பகுதியை மொழிபெயர்த்தவரான திரு.சாமுவேல் மூர் தற்போதைய இந்த மொழிபெயர்ப்பினை உருவாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து இதனைத் திருத்தியமைத்தோம். வரலாற்றுக் குறிப்புகளை விளக்குகின்ற சில குறிப்புரைகளை நான் சேர்த்துள்ளேன்.
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 30, 1888.
1890-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
மேற்கண்ட முகவுரை [1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்குத் தான் எழுதிய முகவுரையை ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்] எழுதப்பட்ட பிறகு, அறிக்கையின் ஒரு புதிய ஜெர்மன் பதிப்பு மீண்டும் அவசியமாகியுள்ளது. அத்துடன் அறிக்கைக்கும் நிறையவே நிகழ்ந்துள்ளன. அவற்றையும் இங்குப் பதிவு செய்தாக வேண்டும்.
வேரா ஸசூலிச் மொழிபெயர்த்த இரண்டாவது ரஷ்ய மொழிபெயர்ப்பு ஒன்று 1882-இல் ஜெனீவாவில் வெளியானது. அந்தப் பதிப்புக்கு மார்க்ஸும் நானும் முகவுரை எழுதினோம். துரதிர்ஷ்டவசமாக அம்முகவுரையின் மூல ஜெர்மன் கையெழுத்துப் பிரதி காணாமல் போய்விட்டது[20]. ஆகவே அதை நான் ரஷ்ய மொழியிலிருந்து திருப்பி மொழிபெயர்த்தாக வேண்டும். இது மூல உரையை எந்த வகையிலும் மேம்படுத்தப் போவதில்லை. அந்த முகவுரை வருமாறு:
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலகல் ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலை நாட்டினரால் அப்போது அதில் (அறிக்கையின் அந்த ருஷ்யப் பதிப்பில்) ஓர் இலக்கிய ஆர்வத்தை மட்டுமே காண முடிந்தது. அத்தகைய ஒரு கண்ணோட்டம் இன்று சாத்தியமற்றது. அறிக்கையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை எடுத்துக்கூறும் கடைசிப் பிரிவு, அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) பாட்டாளி வர்க்க இயக்கம் இன்னும்கூட எவ்வளவு குறுகிய களத்தினில் செயல்படுவதாக இருந்தது என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ருஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை பற்றிய தகவல்கள் இப்பிரிவில் விடுபட்டுள்ளன. அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாக ருஷ்யாவும், குடியேற்றத்தின் மூலம் ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி சக்திகளை ஈர்த்துக் கொள்ளும் நாடாக அமெரிக்க ஐக்கிய நாடும் இருந்துவந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின. அதே வேளையில், ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்களின் விற்பனைச் சந்தைகளாகவும் விளங்கின. ஆகவே அக்காலகட்டத்தில் இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வகையில் அன்றைய ஐரோப்பிய அமைப்பின் ஆதாரத் தூண்களாய்த் திகழ்ந்தன.
இன்று நிலைமை எப்படி மாறிவிட்டது! ஐரோப்பியக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவின் மிகப்பெரும் விவசாயப் பொருளுற்பத்திக்குத் காரணமாக அமைந்தது. இந்த உற்பத்தி உருவாக்கிய போட்டியோ இன்று ஐரோப்பாவிலுள்ள சிறிதும் பெரிதுமான நிலவுடைமையின் அடித்தளங்களையே உலுக்கி வருகின்றது. அத்துடன், இதுநாள்வரை நிலவிவந்த, மேற்கு ஐரோப்பாவின், குறிப்பாக இங்கிலாந்தின் தொழில்துறை ஏகபோகத்தை வெகுவிரைவில் தகர்த்துவிடும் அளவுக்கு அத்தனை ஆற்றலோடும், அவ்வளவு பெரிய அளவிலும், அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறை மூலாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தக் குடியேற்றம் சாத்தியமாக்கியது. இவ்விரு நிலைமைகளும் அமெரிக்க நாட்டின்மீதே புரட்சிகரமான முறையில் எதிர்வினை ஆற்றுகின்றன. அரசியல் அமைப்பு முழுமைக்கும் அடிப்படையாக விளங்கும், விவசாயிகளின் சிறிய, நடுத்தர நிலவுடைமைகள், மிகப்பெரும் பண்ணைகளின் போட்டிக்குப் படிப்படியாகப் பலியாகின்றன. கூடவே, தொழிலகப் பிரதேசங்களில் பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியத்தகு மூலதனக் குவிப்பும் முதன்முறையாக வளர்ச்சிபெற்று வருகின்றன.
இப்போது ருஷ்யாவைப் பாருங்கள்! 1848 – 49 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது ஐரோப்பிய முடியரசர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினரும்கூட, அப்போதுதான் விழித்தெழத் தொடங்கியிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க, ருஷ்யத் தலையீடுதான் ஒரே தீர்வு என நம்பினர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். இன்றைக்கு, அவர் புரட்சியின் போர்க்கைதியாக காட்சினாவில் (Gatchina) இருக்கிறார். ருஷ்யாவோ, ஐரோப்பாவில் புரட்சிகர நடவடிக்கையின் முன்னணிப் படையாகத் திகழ்கிறது.
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவியலாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன் கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீர வேண்டுமா?
இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணைநிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 21, 1882"
ஏறத்தாழ இதே காலத்தில் ஒரு புதிய போலிஷ் பதிப்பு கம்யூனிஸ்டு அறிக்கை (Manifest Kommunistyczny) என்ற பெயரில் ஜெனீவாவில் வெளிவந்தது.
இதுதவிர, ஒரு புதிய டேனிஷ் மொழிபெயர்ப்பு 1885-ஆம் ஆண்டு சமூக-ஜனநாயக நூல்திரட்டு (Social-demokratisk Bibliothek) என்னும் தொகுப்பில் வெளியாகியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அது முழுமை பெற்றதாக இல்லை. முக்கியத்துவம் கொண்ட சில வாசகங்கள் மொழிபெயர்ப்பாளருக்குக் கடினமாகத் தோன்றின போலும், எனவே அவை விடப்பட்டுள்ளன. அதோடுகூட, இங்கும் அங்கும் கவனக் குறைவின் அறிகுறிகளும் தென்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர் இன்னும் சற்றே கூடுதலான அக்கறை எடுத்திருந்தால் அவர் மிகவும் உன்னதமான ஒரு படைப்பைத் தந்திருக்க முடியும் என்பதை அவரது மொழிபெயர்ப்பு புலப்படுத்துகிறது. எனவே, அவரது கவனக் குறைவு வருத்தம் கொள்ளத்தக்க வகையில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
1885-ஆம் ஆண்டில் பாரிசில் சோஷலிஸ்டு (Le Socialiste) இதழில் ஒரு புதிய ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இன்றுவரை வெளியானவற்றுள் இதுவே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாகும். இதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஸ்பானிஷ் பதிப்பு ஒன்று அதே ஆண்டில் வெளியானது. முதலில் மாட்ரிடில் சோஷலிஸ்டு (El Socialista) இதழில் வெளியானது. அதன்பின் பிரசுர வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது: Manifiesto del Partido Comunista por Carlos Marx y F.Engels, Madrid, Administracion de El Socialista, Hernan Cortes 8. சுவாரஸ்யமான ஒரு விவரத்தையும் இங்குக் குறிப்பிடலாம் எனக் கருதுகிறேன். 1887-இல் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்றின் கையெழுத்துப் பிரதி கான்ஸ்டான்டிநோப்பிளில் ஒரு பதிப்பாளரிடம் தரப்பட்டது. ஆனால், அந்த நல்ல மனிதரோ மார்க்ஸ் பெயரைத் தாங்கிய ஒரு படைப்பை வெளியிடும் துணிவைப் பெற்றிருக்கவில்லை. நூலாசிரியர் என தன்னுடைய சொந்தப் பெயரையே போட்டுக்கொள்ளுமாறு மொழிபெயர்ப்பாளருக்கு ஆலோசனை கூறினார். என்றாலும் மொழிபெயர்ப்பாளர் அதற்கு மறுத்துவிட்டார்.
ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று எனக் கூடக்குறையத் துல்லியமற்ற பல அமெரிக்க மொழிபெயர்ப்புகள் இங்கிலாந்தில் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாக வெளியானபின், ஒருவழியாக 1888-இல் ஒரு நம்பகமான பதிப்பு வெளியானது. இதனை என் நண்பர் சாமுவேல் மூர் மொழிபெயர்த்திருந்தார். அச்சகத்துக்கு அனுப்புமுன் நாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அதனைச் சரிபார்த்தோம். இந்தப் பதிப்பின் தலைப்பு: Manifesto of the Communist Party, by Karl Marx and Frederick Engels. Authorised English Translation, edited and annotated by Frederick Engels, 1888, London, William Reeves, 185 Fleet st., E.C. அந்தப் பதிப்பின் குறிப்புகள் சிலவற்றை தற்போதைய இந்தப் பதிப்பில் சேர்த்துள்ளேன்.
அறிக்கையானது தனக்கே உரிய ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அது வெளிவந்த காலத்தில், இன்னும் அதிக எண்ணிக்கையைத் தொடாத, அப்போதிருந்த [குறைந்த எண்ணிக்கையிலான] விஞ்ஞான சோஷலிச முன்னணிப் படையினர் ஆர்வத்தோடு அதனைக் கொண்டாடினர் (முதலாவது முகவுரையில் குறிப்பிட்டுள்ள மொழிபெயர்ப்புகளின் விவரம் இதனை உறுதிப்படுத்துகிறது). 1848 ஜூனில் பாரிஸ் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து உருவான பிற்போக்குச் சக்திகளால் மிக விரைவிலேயே அறிக்கை பின்னிலைக்குத் தள்ளப்பட்டது. முடிவாக, 1852 நவம்பரில் கொலோன் கம்யூனிஸ்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக [பிந்தைய முகவுரை ஒன்றில் கொலோன் கம்யூனிஸ்டு வழக்கு பற்றி விளக்கமாகக் கூறப்படுகிறது], ”சட்டத்தின்படி” அது தீண்டாத் தகாததாக தள்ளி வைக்கப்பட்டது. பிப்ரவரிப் புரட்சியைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் இயக்கம் பொது அரங்கிலிருந்து மறைந்தது. அத்துடன் கூடவே, அறிக்கையும் பின்னிலைக்குப் போய்ச்சேர்ந்தது.
ஆளும் வர்க்கங்களுடைய அதிகாரத்தின்மீது ஒரு புதிய தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் மீண்டும் திரட்டியபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உருப்பெற்றது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கம் முழுவதையும் ஒரே பெரும் படையாக ஒன்றிணைப்பதே இச்சங்கத்தின் குறிக்கோளாக இருந்தது. ஆகையால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்து தொடங்க இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும், ஃபிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon) ஆதரவாளர்களுக்கும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களுக்கும் (Lassalleans)[ஏ3] கதவை அடைத்துவிடாத வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அகிலத்தின்
[ஏ3] லஸ்ஸால் (Lassalle) எங்களிடம் தனிப்பட்ட முறையில் எப்போதும் தம்மை மார்க்சின் ”சீடர்” என்றே கூறி வந்துள்ளார். அதன்படியே அவர் பெரும்பாலும் அறிக்கையின் கோட்பாடுகளுக்கு இணங்கவே செயல்பட்டார். அவரைப் பின்பற்றியவர்களைப் பொறுத்தவரை நிலைபாடு முற்றிலும் வேறாக இருந்தது. அரசுக் கடன் உதவியுடன் நடத்தப்படும் கூட்டுறவுத் தொழிற்கூடங்களுக்கான (Co-operative Workshops) லஸ்ஸாலின் கோரிக்கைக்கு அப்பால் அவர்கள் செல்லவில்லை. அவர்கள் ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தையும் அரசு உதவியின் ஆதரவாளர்கள், சுய-உதவியின் ஆதரவாளர்கள் எனப் பிரித்துவிட்டனர். [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
இருந்தபோதிலும், அறிக்கை வெளியானபோது, அதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் இரண்டு வகையினர் சோஷலிஸ்டுகள் எனக் கருதப்பட்டனர். ஒருபுறம் பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளின் ஆதரவாளர்கள் இருந்தனர். குறிப்பாக, இங்கிலாந்தில் ஓவனியர்கள், ஃபிரான்சில் ஃபூரியேயர்கள். இவ்விரு வகையினரும் அக்காலத்திலேயே குறுங்குழுக்கள் நிலைக்குச் சுருங்கிப் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள் இருந்தனர். மூலதனத்துக்கும் லாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி, இவர்கள் தமது சகல நோய்நீக்கும் சஞ்சீவிகள் மூலமும் அனைத்துவகை சில்லறை ஒட்டு வேலைகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினர். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள். 'படித்த' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடியவர்கள். என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி சமுதாய அமைப்பைத் தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரியது. வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதை அது தீர்க்கமாக உணர்ந்திருந்தது. இப்பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட, பல வேளைகளில் பெரும்பாலும் பக்குவமற்ற ஒரு கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது, ஃபிரான்சில் காபேயின் 'ஐகேரியக்' கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் கம்யூனிசம் ஆகிய இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைப்புகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது. 1847-இல் சோஷலிசம் என்பது முதலாளித்துவ வர்க்க இயக்கத்தையும் [வேறொரு முகவுரையில் நடுத்தர வர்க்க இயக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்], கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாக இருந்தன. சோஷலிசமானது, குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் மிகவும் மரியாதைக்கு உரியதாக விளங்கியது, ஆனால் கம்யூனிசமோ அதற்கு நேர்மாறானதாக இருந்தது. நாங்கள் மிகத் தொடக்க காலம்தொட்டே, 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயல்பாட்டால்தான் பெறப்பட்டாக வேண்டும்'[21] என்ற தீர்மானகரமான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தோம். எனவே, [சோஷலிசம், கம்யூனிசம் என்கிற] இரண்டு பெயர்களுள் எதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அன்றைக்கு எங்களிடம் எவ்விதத் தயக்கமும் இருந்திருக்க முடியாது. அன்றுமுதல் இன்றுவரை அப்பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
”உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” [அடிக்குறிப்பு எண் 52 காண்க] நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் திரண்டெழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில், நாங்கள் இந்த முழக்கத்தை உலகத்துக்குப் பிரகடனம் செய்தபோது, மிகச்சில ஆதரவுக் குரல்களே எழுந்தன. என்றாலும், 1864 செப்டம்பர் 28-இல் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி மக்கள், பெருமைமிக்க நினைவுக்குரிய சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் [முதலாவது அகிலம்] கைகோத்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்பது உண்மைதான். ஆனால் அது உருவாக்கிய, அனைத்து நாட்டுப் பாட்டாளிகளின் அழிவில்லா ஐக்கியமானது இன்னும் நிலைத்து நிற்கிறது, எப்போதையும்விட வலிமைமிக்கதாக வாழ்கிறது என்பதற்கு இன்றைய நாளைவிட வேறு சிறந்த சாட்சி ஏதுமில்லை. காரணம், இந்த வரிகளை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம்[22], ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போரிடும் சக்திகளை மேலாய்வு செய்து வருகின்றது. இந்தப் போராட்ட சக்திகள் முதன்முதலாகத் திரட்டப்பட்டுள்ளன. அதுவும் ஒரே படையணியாக, ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன. 1866-இல் அகிலத்தின் ஜெனீவா மாநாட்டிலும், மீண்டும் 1889-இல் பாரிஸ் தொழிலாளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தியதைப்போல், ஒரே மாதிரியான எட்டு மணிநேர வேலைநாள் என்பதை முறையாகச் சட்டம் இயற்றி நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள் ஆகும். இன்றைய இந்தக் காட்சி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும் வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்.
இதனை மார்க்ஸ் அவர்கள் தம் கண்கொண்டு நேரில் கண்டு களிக்க இப்போது என் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், மே 1, 1890.
1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை
கம்யூனிஸ்டு அறிக்கையின் ஒரு புதிய போலிஷ் பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது என்கிற உண்மை பல்வேறு சிந்தனைகளை எழுப்பியுள்ளது.
அனைத்துக்கும் முதலாவதாக, அண்மைக் காலமாகவே, அறிக்கையானது ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு சுட்டுகைபோல (index) ஆகியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அந்நாட்டுத் தொழிலாளர்களிடையே, உடைமை வர்க்கங்கள் தொடர்பாகத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அவர்களின் நிலைபாடு குறித்துத் தெளிவுபெற வேண்டிய தேவையும் வளர்கின்றது. சோஷலிச இயக்கம் அவர்களிடையே பரவுகின்றது. அறிக்கைக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையினுடைய பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை மட்டுமன்றிப் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சி நிலையைக்கூடப் பெருமளவு துல்லியமாக அளவிட்டுவிட முடியும்.
அதன்படி, புதிய போலிஷ் பதிப்பானது, போலிஷ் தொழில்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய பதிப்பு வெளிவந்த பிறகே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காங்கிரஸ் போலந்து[23] எனப்படும் ருஷ்யப் போலந்துப் பகுதி, ருஷ்யப் பேரரசின் பெரிய தொழில்துறை மண்டலமாக மாறியுள்ளது. ருஷ்யாவின் பெருவீதத் தொழில்துறை அங்குமிங்குமாகச் சிதறுண்டு கிடக்கிறது. ஒரு பகுதி பின்லாந்து வளைகுடாவைச் சுற்றிலும், வேறொன்று மையப் பகுதியிலும் (மாஸ்கோ, விளாதிமீர்), மூன்றாவது, கருங்கடல், அஸோவ்கடல் கரையோரங்களிலும், மற்றும்சில வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. அதே வேளையில், போலந்தின் தொழில்துறை, ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பரப்புக்குள் நெருக்கமாக அமைந்துள்ளது. அத்தகைய ஒருங்குகுவிப்பினால் விளைகின்ற சாதக, பாதகங்களை ஒருசேர அனுபவிக்கிறது. போட்டியிடும் ருஷ்யத் தொழிலதிபர்கள், போலிஷ் மக்களை ருஷ்யர்களாக மாற்றுவதில் ஆர்வம்மிக்க விழைவு கொண்டோராக இருப்பினும் அதனையும் மீறி, போலந்துக்கு எதிராகக் காப்புச் சுங்கவரிகள் சுமத்த வேண்டுமெனக் கோரியதன் மூலம், அதன் சாதகக் கூறுகளை உறுதி செய்கின்றனர். போலிஷ் தொழிலதிபர்களுக்கும், ருஷ்ய அரசாங்கத்துக்கும் இருக்கின்ற பாதகக் கூறுகள், போலிஷ் தொழிலாளர்களிடையே சோஷலிசக் கருத்துகள் அதிவேகமாகப் பரவுவதிலும், அறிக்கையின் வளர்ந்துவரும் செல்வாக்கிலும் வெளிப்படுகின்றன.
ருஷ்யத் தொழில்துறை வளர்ச்சியை விஞ்சிச் செல்லும் போலிஷ் தொழில்துறையின் அதிவேக வளர்ச்சியானது, அதனளவில் போலிஷ் மக்களுடைய வற்றாத உள்ளாற்றலின் ஒரு புதிய நிரூபணமாகும். விரைவில் நடந்தேறப் போகும் போலந்தின் தேசிய மீட்சிக்கு ஒரு புதிய உத்தரவாதமும் ஆகும். மேலும், ஒரு சுதந்திரமான வலுமிக்க போலந்து மீண்டெழுவது போலிஷ் மக்களுக்கு மட்டுமன்றி, நம் எல்லோரின் அக்கறைக்கும் உரிய விஷயமாகும். ஐரோப்பிய நாடுகளிடையே உளப்பூர்வமான சர்வதேச ஒத்துழைப்பு என்பது, அந்நாடுகள் ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையாகத் தன்னாட்சி பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பாட்டாளி வர்க்கப் பதாகையின்கீழ் நடைபெற்ற 1848-ஆம் ஆண்டுப் புரட்சியானது, மிஞ்சிப் போனால், பாட்டாளி வர்க்கப் போராளிகளை வெறுமனே முதலாளித்துவ வர்க்கத்தின் வேலையைச் செய்யவைத்தது. புரட்சியின் இறுதி விருப்ப ஆவண நிறைவேற்றாளர்களான (testamentary executors) லூயி போனப்பார்ட்[24], பிஸ்மார்க்[25] இவர்கள் மூலமாக இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தது. இம்மூன்று நாடுகளும் சேர்ந்து செய்ததைவிடப் புரட்சிக்காக 1792 முதலே போலந்து நாடு அதிகமாகச் செய்துள்ளது. ஆனால், 1863-இல் தன்னிலும் பத்து மடங்கு பெரிதான ருஷ்யப் படையிடம் தோற்றபோது, போலந்து நாடு அதன் சொந்தப் படைபலத்தோடு மட்டுமே களத்தில் விடப்பட்டது.[26] போலிஷ் பிரபுக்குலத்தால் போலந்தின் சுதந்திரத்தைப் பேணிக் பாதுகாக்கவோ, [பறிபோனபின்] மீட்டெடுக்கவோ முடியவில்லை. குறைந்தபட்சமாகச் சொல்வதெனில், இன்று முதலாளித்துவ வர்க்கத்துக்கு இந்தச் சுதந்திரம் ஒரு பொருட்டன்று. என்றபோதிலும், ஐரோப்பிய நாடுகளின் இணக்கமான ஒத்துழைப்புக்குப் போலந்தின் சுதந்திரம் இன்றியமையாதது. போலந்தின் இளம் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இந்தச் சுதந்திரத்தைப் பெற்றுத்தர முடியும். அதன் கைகளில் இந்தச் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும். போலந்தின் சுதந்திரம் போலந்துத் தொழிலாளர்களுக்கு எந்த அளவுக்குத் தேவையோ அதே அளவுக்கு அது ஐரோப்பாவின் மீதமுள்ள பகுதிகள் அனைத்திலுமுள்ள தொழிலாளர்களுக்கும் தேவையானதாகும்.
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், பிப்ரவரி 10, 1892.
1893-ஆம் ஆண்டின் இத்தாலியப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
இத்தாலிய வாசகருக்கு
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியான நிகழ்வு, மிலானிலும் பெர்லினிலும் புரட்சிகள் நடைபெற்ற 1848, மார்ச் 18-ஆம் நாளுடன் ஒன்றிப் போனதாகச் சொல்லலாம். அப்புரட்சிகள், ஒன்று ஐரோப்பாக் கண்டத்தின் மையத்திலும் மற்றொன்று மத்தியதரைக் கடற்பகுதியின் மையத்திலுமாக அமைந்த இரு தேசங்களின் ஆயுதம் ஏந்திய எழுச்சிகளாகும். இரு தேசங்களும் அதுநாள்வரை பிரிவினையாலும் உட்பூசலாலும் நலிவுற்று, அதன் காரணமாக அந்நிய ஆதிக்கத்தின்கீழ் விழுந்து கிடந்தன. இத்தாலியானது ஆஸ்திரியப் பேரரசருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. ஜெர்மனியோ அனைத்து ருஷ்ய ஜார் மன்னரின் நுகத்தடியில் சிக்குண்டு கிடந்தது. [ஜெர்மனியின் அடிமைநிலை இத்தாலியின் நிலையைவிட] அதிக மறைமுகமானது எனினும், செயல்விளைவில் அதைவிடக் குறைந்ததில்லை. 1848 மார்ச் 18-இன் விளைவுகள் இத்தாலி, ஜெர்மனி நாடுகளை இந்த அவக்கேட்டிலிருந்து விடுவித்தன. இந்த மாபெரும் தேசங்கள் இரண்டும், 1848 முதல் 1871 வரையிலான காலப்பகுதியில் மீட்டமைக்கப் பெற்று, எப்படியோ அவை மீண்டும் தம் சொந்தக் காலில் நிற்க முடிந்தது. அதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸ் அடிக்கடி கூறிவந்ததுபோல், 1848-ஆம் ஆண்டுப் புரட்சியை ஒடுக்கியவர்களே, அவர்களையும் மீறி, அந்தப் புரட்சியினுடைய இறுதி விருப்ப ஆவணத்தின் நிறைவேற்றாளர்களாகவும் (testamentary executors) இருந்ததே ஆகும்.
எங்கெங்கும் அந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருந்தது, வீதிகளில் தடுப்பரண்கள் அமைத்து, உயிர்க்குருதி சிந்திப் போராடியது தொழிலாளி வர்க்கம்தான். ஆனால், பாரிஸ் தொழிலாளர்கள் மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்துவ ஆட்சியமைப்பைத் தகர்த்திடும் மிகத் திட்டவட்டமான நோக்கத்தைக் கொண்டிருந்தனர். தம் சொந்த வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நிலவும் ஜென்மப் பகையை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனாலும்கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ, பெருந்திரளான ஃபிரெஞ்சுத் தொழிலாளர்களின் அறிவுசார் வளர்ச்சியோ சமுதாயப் புனர்நிர்மாணத்தைச் சாத்தியமாக்கும் கட்டத்தினை இன்னும் எட்டவில்லை. எனவே, முடிவில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் அறுவடை செய்துகொண்டது. இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற பிற நாடுகளில், மிகத் தொடக்கத்திலிருந்தே, தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு உயர்த்தியதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஆனால், தேச விடுதலை இல்லாமல், எந்த நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி சாத்தியமன்று. எனவே, 1848-ஆம் ஆண்டுப் புரட்சி, அதுவரையில் ஐக்கியமும் தன்னாட்சியும் பெறாதிருந்த தேசங்களுக்கு அவற்றைப் பெற்றுத் தரவேண்டியிருந்தது. இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி ஆகியவை இவ்வாறே அவற்றைப் பெற்றன. அந்த வரிசையில் போலந்தும் பின்தொடரும்.
இவ்வாறாக, 1848-ஆம் ஆண்டுப் புரட்சி, சோஷலிசப் புரட்சியாக இருக்கவில்லை. என்றாலும், அது சோஷலிசப் புரட்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது; அதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்தது. அனைத்து நாடுகளிலும் பெருவீதத் தொழில்துறைக்கு ஊக்கம் அளித்ததன் மூலம், முதலாளித்துவ ஆட்சியமைப்பு, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில், எண்ணிறந்த, ஒன்றுதிரண்டுள்ள, சக்திமிக்க பாட்டாளி வர்க்கத்தை எங்கெங்கும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக, முதலாளித்துவ வர்க்கம், அறிக்கையின் மொழியில் சொல்வதெனில், தனக்குச் சவக்குழி தோண்டுவோரைத் தானே வளர்த்தெடுத்துள்ளது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும், பொதுவான லட்சியங்களை நோக்கிய, இந்தத் தேசங்களின் சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பையும் வென்றெடுப்பது சாத்தியமாக இருக்காது. 1848-ஆம் ஆண்டுக்கு முன்பு நிலவிய அரசியல் நிலைமைகளில் இத்தாலிய, ஹங்கேரிய, ஜெர்மானிய, போலிஷ், ருஷ்யத் தொழிலாளர்கள் கூட்டான சர்வதேச நடவடிக்கையை எடுத்திருக்க முடியுமா என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள்!
ஆகவே, 1848-இல் புரியப்பட்ட சமர்கள் வீண்போகவில்லை. அந்தப் புரட்சிகர சகாப்தத்துக்குப் பின் கடந்துபோன நாற்பத்தைந்து ஆண்டுகளும் பயனின்றிக் கழிந்துவிடவில்லை. அவற்றின் பலன்கள் கனிந்து வருகின்றன. நான் விரும்புவதெல்லாம், மூலப் பதிப்பின் வெளியீடு சர்வதேசப் புரட்சிக்குக் கட்டியங் கூறியதைப்போல, இந்த இத்தாலிய மொழிபெயர்ப்பின் வெளியீடு, இத்தாலியப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாக.
முதலாளித்துவம், கடந்த காலத்தில் ஆற்றிய புரட்சிகரப் பங்கினை அறிக்கை நியாயத்துடன் எடுத்துரைக்கிறது. இத்தாலியே முதலாவது முதலாளித்துவ தேசம் ஆகும். நிலப்பிரபுத்துவ மத்திய காலத்தின் முடிவையும், நவீன முதலாளித்துவ சகாப்தத்தின் பிறப்பையும் குறித்துக் காட்டிய மாமனிதன் ஓர் இத்தாலியனே. அவனே மத்திய காலத்தின் கடைசிக் கவிஞனும் நவீன காலத்தின் முதற் கவிஞனுமான தாந்தே (Dante) ஆவான். 1300-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது போன்றே இன்று ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தம் நெருங்கி வருகின்றது. இந்தப் புதிய, பாட்டாளி வர்க்கச் சகாப்தத்தின் பிறப்பைக் குறித்துக்காட்டும் ஒரு புதிய தாந்தேயை இத்தாலி நமக்குத் தருமா?
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், பிப்ரவரி 1, 1893.
(முகவுரைகள் முற்றும்)
அடிக் குறிப்புகள்
[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]
[1] கம்யூனிஸ்டுக் கழகம் (Communist Leaguge): மார்க்ஸ், எங்கெல்ஸ் தோற்றுவித்த முதல் சர்வதேசக் கம்யூனிஸ்டு அமைப்பு. இது 1847 முதல் 1852 வரை நிலவியது.
[2] பிப்ரவரிப் புரட்சி: ஃபிரான்ஸ் நாட்டில் 1848 பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியைக் குறிக்கிறது. அதே ஆண்டு ஜூன் மாதம் தொழிலாளர்கள் தலைமையில் இன்னோர் எழுச்சி நடைபெற்றதால் இது ‘பிப்ரவரிப் புரட்சி’ என அழைக்கப்படுகிறது.
[3] சிவப்புக் குடியரசுவாதி (The Red Republician): ஜார்ஜ் ஜுலியன் ஹார்னி என்பவர் 1850 ஜுன் முதல் நவம்பர் வரை லண்டனில் வெளியிட்ட ’சாசன இயக்க’ (Chartist Movement) வார இதழ். 1850 நவம்பர் மாதம் இதன் 21-24 இதழ்களில் 'கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை' சுருக்கமான வடிவில் வெளியானது.
[4] ஜூன் எழுச்சி: ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 1848 ஜுன் 23-26 தேதிகளில் நடைபெற்ற தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த புரட்சிகர எழுச்சியைக் குறிக்கிறது. இதை ஃபிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் மிகவும் மிருகத்தனமான முறையில் கொடுமையாக அடக்கியது. இந்தப் புரட்சிகர எழுச்சிதான் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதல் மாபெரும் உள்நாட்டுப் போராகும்.
[5] 'சோஷலிஸ்டு’ (Le Socialiste) வார இதழ்: நியூயார்க்கில் 1871 அக்டோபர் முதல் 1873 மே வரை ஃபிரெஞ்சு மொழியில் வெளிவந்த பத்திரிக்கை. அகிலத்தின் வட அமெரிக்கக் கூட்டமைப்பில் ஃபிரெஞ்சுப் பிரிவுகளின் ஏடாக இது விளங்கியது. ஹேக் மாநாட்டுக்குப் பிறகு இது அகிலத்தில் இருந்து விலகிக் கொண்டது. இந்த நூலில் குறிப்பிடப்படும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு 'சோஷலிஸ்டு' பத்திரிக்கையின் 1872 ஜனவரி – மார்ச் இதழ்களில் வெளியானது.
[6] பாரிஸ் கம்யூன்: 1871-ஆம் ஆண்டு ஃபிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் நிறுவப்பட்ட, உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி அரசு. மார்ச் 18 முதல் மே 28 வரை மொத்தம் 72 நாட்களே நீடித்தது. 1871 மார்ச் 18-இல் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் சுருக்கமாகப் ‘பாரிஸ் கம்யூன்’ என்று அழைக்கப்படுகிறது. 'ஃபிரான்சில் உள்நாட்டுப் போர்' என்னும் நூலில் மார்க்ஸ், பாரிஸ் கம்யூனின் வரலாற்றை எடுத்துக் கூறி, அதன் சாரத்தை விளக்கி வரைந்துள்ளார்.
[7] அறிக்கை: முகவுரைகளில் தடித்த எழுத்தில் அறிக்கை எனக் குறிப்பிடப்படுவது கம்யூனிஸ்டு அறிக்கையையே குறிக்கிறது.
[8] கோலகல் (Kolokol) இதழ்: அலெக்சாந்தர் ஹெர்த்சன், நிக்கலாய் ஒகர்யோவ் ஆகிய இருவரும் வெளியிட்டு வந்த புரட்சிகர-ஜனநாயகச் செய்திப் பத்திரிக்கை. ’மணி’ என்னும் பொருளுடைய ‘கோலகல்’ இதழை 'சுதந்திர ருஷ்யன் அச்சகம்' அச்சிட்டு வந்தது. ஹெர்த்சன் தோற்றுவித்த இந்த அச்சகம் 1865 வரை லண்டனில் இயங்கியது. பிறகு ஜெனீவாவுக்கு மாற்றப்பட்டது. 1869-இல் இந்த அச்சகம் கம்யூனிஸ்டு அறிக்கையின் முதல் ருஷ்யப் பதிப்பை வெளியிட்டது.
[9] 1881 மார்ச் 1-ஆம் தேதியன்று ருஷ்யப் பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர் 'நரோத்னயா வோல்யா' ('மக்கள் விடுதலை') என்னும் ரகசியப் பயங்கரவாதக் குழுவினரால் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த ஜார் மன்னர் மூன்றாம் அலெக்சாந்தர், 'நரோத்னயா வோல்யா' குழுவினர் மேலும் பயங்கரச் செயல்களில் இறங்கக்கூடும் என்று அஞ்சி காட்சினாவிலேயே தங்கிவிட்டார். இதனையே மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இங்குக் குறிப்பிடுகின்றனர்.
[10] டார்வினுடைய கொள்கை (Darwin’s Theory): சார்லஸ் ராபர்ட் டார்வின் (1809-1882) புகழ்பெற்ற ஆங்கில விஞ்ஞானி ஆவார். பொருள்முதல்வாத உயிரியலையும், உயிரினங்களின் தோற்றம் பற்றிய பரிணாமக் கொள்கையையும் உருவாக்கியவர். அங்கக உலகின் வளர்ச்சி குறைந்த சிக்கல்கொண்ட வடிவங்களிலிருந்து தொடங்கி, அதிகச் சிக்கலான வடிவங்களுக்கு மாறிச்செல்கிறது என்றும், பழைய வடிவங்கள் மறைவதும், புதிய வடிவங்கள் தோன்றுவதும் இயற்கை வரலாற்று வளர்ச்சியின் விளைவே என்றும் முதன்முதலில் ஆதாரத்தோடு நிரூபித்தவர் இவரே. தமது கோட்பாடுகளையும், ஆய்வுகளையும், சான்றுகளையும் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் நூலில் டார்வின் விளக்கியுள்ளார்.
[11] கொலோன் கம்யூனிஸ்டு வழக்கு: கம்யூனிஸ்டுக் கழகத்தின் 11 உறுப்பினர்கள் மீது பிரஷ்ய அரசாங்கம் தொடுத்த வழக்கு. போலி ஆவணங்கள், பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் தேசத்துரோகக் குற்றம் புரிந்ததாகப் பழிசுமத்தினர். ஏழு பேருக்கு மூன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை கோட்டைச் சிறையில் அடைக்குமாறு தண்டனை விதிக்கப்பட்டது. சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான பிரஷ்யன் போலீசாரின் இந்த ஆத்திரமூட்டும் செயலை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்தியுள்ளனர்.
[12] புரூதோன் (Proudhon, 1809-1865): பியேர்-ஜோஸெய் புரூதோன் என்பது இவரது முழுப்பெயர். ஃபிரான்சு நாட்டவர். பொருளாதார அறிஞராகவும், சமூகவியல் ஆய்வாளராகவும் அறியப்படுபவர். குட்டி முதலாளித்துவக் கொள்கைவாதியாக அடையாளங் கணப்பட்டவர். அராஜகவாதத்தைத் (Anarchism) தோற்றுவித்தவர்களுள் ஒருவர். சிறு தனியார் உடைமையை என்றும் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார். பெரு முதலாளித்துவத்தைக் குட்டி முதலாளித்துவக் கண்ணோட்டத்துடன் விமர்சித்தார். 1846-இல் தம்முடைய குட்டி முதலாளித்துவத் தத்துவக் கருத்துகளை விளக்கிப் “பொருளாதாரப் பகைமைகளின் தொகுப்பு அல்லது வறுமையின் தத்துவம்” என்னும் நூலை வெளியிட்டார். மார்க்ஸ், “தத்துவத்தின் வறுமை” என்னும் புகழ்பெற்ற நூலில் புரூதோனின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்து, அவை விஞ்ஞான அடிப்படை அற்றவை என்பதை நிறுவினார்.
[13] லஸ்ஸால்: பெர்டினாண்டு லஸ்ஸால் ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் முதல் தலைவர். இவரை ஒரு குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு என வரையறுக்கலாம். இவரைப் பின்பற்றியோர் ‘லஸ்ஸாலியர்’ என அழைக்கப்பட்டனர். இவரும் இவரைப் பின்பற்றியோரும் முதன்மையான தத்துவ, அரசியல் பிரச்சினைகளில் சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொண்டனர். சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பிரஷ்ய அரசைப் பயன்படுத்திக்கொள்வது சாத்தியம் எனக் கருதினர். பிஸ்மார்க் அரசுடன் பேச்சு வார்த்தைகளையும் மேற்கொள்ள முயன்றனர்.
[14] முதலாவது ருஷ்ய மொழிபெயர்ப்பை ‘கோலகல்’ இதழின் அச்சகம் 1869-ஆம் வெளியிட்டது. ஆனால் ஏங்கெல்ஸ் கவனக் குறைவாக ’1863-ஆம் ஆண்டுவாக்கில்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
[15] உண்மையில் இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பை ஆக்கியவர் ஜி.வி.பிளக்கானவ் (G.V.Plekhanov). பின்னாளில் ஏங்கெல்ஸ், 1894-இல் பெர்லினில் வெளியான ‘ருஷ்யாவில் சமூக உறவுகள்’ (Social Relations in Russia) என்னும் தன்னுடைய கட்டுரையின் பின்னுரையில், ஜி.வி.பிளக்கானவ் எனச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
[16] ஓவனியர்கள் (Owenites): இங்கிலாந்தின் கற்பனாவாத சோஷலிஸ்டான ராபர்ட் ஓவனின் (Robert Owen, 1771-1858) ஆதாரவாளர்கள். ராபர்ட் ஓவன் முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் முதலாளித்துவ முரண்பாடுகளின் மூல காரணங்களை அவரால் விளக்கிக்காட்ட முடியவில்லை. கல்வி, சமூக சீர்திருத்தம் மூலமாகச் சமூக ஏற்றதாழ்வுகளை அகற்ற முடியும் என நம்பினார். அதற்குரிய ஒரு விரிவான வேலைத்திட்டத்தை முன்வைத்தார். தம் வேலைத்திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன. ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்’ என்னும் நூலில் ஏங்கெல்ஸ், ஓவனின் கோட்பாடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
[17] ஃபூரியேயர்கள் (Fourierists): ஃபிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டான ஷார்ல் ஃபூரியேயின் (Sharl Fourier, 1772-1837) ஆதரவாளர்கள். ஃபூரியே முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாகச் சாடினார். வருங்கால ’இசைவான’ சமுதாயம் மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை அறிந்து கொள்வதன் அடிப்படையில் அமையும் என்றார். எல்லோரும் தானே மனமுவந்து வேலை செய்யும் ‘வேலைக் கூட்டமைப்புகளை’ உருவாக்கி, சோஷலிச சமுதாயத்தைச் சமாதான முறையில் நிறுவ முடியும் என நம்பினார். பலாத்காரப் புரட்சியை எதிர்த்தார். ஃபூரியே தனியார் சொத்துடைமையை எதிர்க்கவில்லை.
[18] கபே (Cabet, 1788-1856): எத்தியேன் கபே என்பது இவரது முழுப்பெயர். ஃபிரெஞ்சுக் குட்டி முதலாளித்துவக் கட்டுரையாளர். கற்பனாவாதக் கம்யூனிசக் கொள்கையின் பிரபலப் பிரதிநிதி. சமுதாயத்தை அமைதியான முறையில் மாற்றி அமைப்பதன் மூலம், முதலாளித்துவ அமைப்பின் குறைகளைக் களைய முடியும் என நம்பினார். ஐகேரியாவில் பயணம் என்னும் நூலில் அவர் தம் கருத்துகளை விளக்கியுள்ளார். அமெரிக்காவில் கம்யூன் அமைப்பை நிறுவித் தம் கருத்துகளை நடைமுறைப்படுத்த முயன்றார். ஆனால் அவரின் சோதனைகள் அடியோடு தோல்வி கண்டன.
[19] வைட்லிங் (Weitling, 1808-1871): வில்லியம் வைட்லிங் என்பது இவரது முழுப்பெயர். ஜெர்மன் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் செல்வாக்குப் பெற்ற தொடக்க காலத் தலைவர். கற்பனாவாத, சமத்துவவாதக் கம்யூனிசக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்களுள் ஒருவர். ஜெர்மானியப் பாட்டாளி வர்க்கத்தின் முதலாவது சுயேச்சையான தத்துவார்த்த இயக்கமாக வைட்லிங்கின் கோட்பாடுகள் ஆக்கமுறையில் பங்காற்றின என ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விஞ்ஞானக் கம்யூனிசம் முன்வைக்கப்பட்டபின் கபே, வைட்லிங் ஆகியோரின் கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்க உணர்வின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தன.
[20] அறிக்கையின் ருஷ்யப் பதிப்புக்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய முகவுரையின் தொலைந்துபோன ஜெர்மன் மூலக் கையெழுத்துப் பிரதி கண்டுபிடிக்கப்பட்டு, மாஸ்கோவிலுள்ள மார்க்சிச-லெனினிச நிறுவனத்தின் ஆவணச் சேமிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
[21] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் 1840-களில் தொடங்கித் தாம் எழுதிவந்த பல நூல்களிலும் அடிப்படையான இத்தத்துவக் கூற்றினை விரித்துரைத்துள்ளனர். இங்கு முறைப்படுத்தி முன்வைக்கப்பட்டுள்ள வடிவில் இது, 'சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின்’ விதிகளில் இருக்கக் காணலாம்.
[22] இந்த முன்னுரையை ஏங்கெல்ஸ் 1890 மே மாதம் முதல்தேதி எழுதினார். 1889 ஜூலையில் நடைபெற்ற இரண்டாம் அகிலத்தின் பாரிஸ் மாநாட்டு முடிவுப்படி, அன்றைய நாளில் (மே 1-இல்) பல ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களில் மக்கள் திரளின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. மாநாட்டில் முன்வைக்கப்பட்ட எட்டுமணிநேர வேலைநாள் மற்றும் பிற கோரிக்கைகளை முன்னிட்டுத் தொழிலாளர்களின் போராட்டம் அமைந்தது. அந்த நாள்முதல் அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே முதல்தேதியை ’மேதினம்’ என்ற பெயரில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
[23] காங்கிரஸ் போலந்து: 1814 – 1815 ஆம் ஆண்டு வியன்னா காங்கிரஸ் முடிவின்படி ருஷ்யாவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போலந்தின் பகுதியாகும்.
[24] லூயி போனப்பார்ட் (Louis Bonaparte, 1808-1873): இவர் மூன்றாம் நெப்போலியன் (1808-1873). முதல் நெப்போலியனின் மருமகன். இரண்டாவது குடியரசன் தலைவர் (1848-1851). ஃபிரெஞ்சுப் பேரரசர் (1852-1870).
[25] பிஸ்மார்க் (Bismark, 1815-1898): எடுவார்ட் லியோப்பால்டு ஒட்டோ பிஸ்மார்க் என்பது இவரது முழுப்பெயர். பிரஷ்யாவின் அரசியல் வித்தகர். இவருடைய கொள்கைகள் பிரஷ்ய நிலவுடைமையாளரின் நலன்களுக்கும் பெரு முதலாளிகளின் நலன்களுக்கும் சேவை புரிந்தன. 1871-இல் பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியைப் பலவந்தமாக ஒன்றுபடுத்தினார். 1871 முதல் 1890 வரை ஜெர்மன் பேரரசின் அதிபராக இருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் கடும் பகைவர். 1878-இல் சோஷலிச எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றினார்.
[26] ஜாரின் ஆதிக்கத்தை எதிர்த்து 1863-1864 இல் போலந்து மக்கள் மேற்கொண்ட தேச விடுதலை எழுச்சி இங்குக் குறிப்பிடப்படுகிறது. புரட்சிகர முன்முனைப்பைத் தவற விட்டுவிட்ட சிறு நிலப்பிரபு வர்க்கக் ('சிவப்பு' – தீவிரக்) கட்சியின் முரணான போக்குக் காரணமாகப் புரட்சியின் தலைமை பெரிய நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளிகளின் கைகளுக்கு மாறிச்சென்றது. அவர்களோ ஜார் அரசுடன் ஒரு லாபகரமான உடன்பாடு செய்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள். 1864 கோடைக்கு முன்பாக இந்த எழுச்சி ஜார் மன்னரின் படைகளால் மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்டது.
(முகவுரைகளுக்கான அடிக்குறிப்புகள் முற்றும்)