வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | அடுத்த பகுதி

ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1891-ஆம் ஆண்டு எழுதிய முன்னுரை


இச்சிறு வெளியீடு முதலில் 1849 ஏப்ரல் 4 தொடங்கிப் புதிய ரைனிஷ் செய்தித்தாளில் தலையங்கக் கட்டுரைத் தொடர் வடிவில் வெளிவந்ததாகும். 1847-இல் பிரஸ்ஸல்சில் ஜெர்மன் தொழிலாளர் கழகத்தில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளிலிருந்து இக்கட்டுரைத் தொடர் தயாரிக்கப்பட்டது. இந்தத் தொடர் நிறைவு பெறாமலே நின்றுவிட்டது. ஹங்கேரி மீது ருஷ்யர்களின் படையெடுப்பு, டிரெஸ்டன், இஸெர்லோன், எல்பர்பெல்டு, பலாட்டினேட், பாடேன் முதலிய இடங்களில் நடைபெற்ற எழுச்சிகள் என அக்காலகட்டத்தில் ஏற்பட்ட ஆபத்தான திடீர் நிகழ்வுகளின் விளைவாக, 269-வது இதழில் தலையங்கத்தின் முடிவிலிருந்த 'தொடரும்' என்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே நின்றுவிட்டது. மேற்கண்ட நிகழ்வுகளின் காரணமாக, 1849 மே 19-இல் இந்தச் செய்தித்தாள் முடக்கப்பட்டது. மார்க்ஸ் விட்டுச் சென்ற தாள்களிடையே இந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சியாகக் கையெழுத்துப் பிரதி எதுவும் காணப்படவில்லை.

”கூலியுழைப்பும் மூலதனமும்” தனி வெளியீடாகப் பல பதிப்புகளில் வெளிவந்துள்ளது. அவற்றுள், ஹோட்டிங்கென்-ஜூரிச்சில் சுவிஸ் கூட்டுறவு அச்சகச் சங்கம் 1884-இல் வெளியிட்ட பதிப்பே கடைசியாக வெளிவந்த பதிப்பாகும். இதுவரை வெளியான பல பதிப்புகளும் மூலக் கட்டுரைகளின் வாசகங்களை [எவ்வித மாற்றமுமின்றி] அப்படியே கொண்டிருந்தன. ஆனால் தற்போதைய [புதிய] பதிப்பு 10,000 பிரதிகளுக்குக் குறையாமல் பிரச்சார வெளியீடாக வினியோகிக்கப்பட உள்ளது. எனவே, இந்த நிலைமைகளில் மூலத்தில் மாற்றம் ஏதுமின்றி அப்படியே மறுபதிப்பாக வெளியாவதை மார்க்ஸே ஆமோதித்திருப்பாரா என்னும் கேள்வி கட்டாயமாக என்முன் எழவே செய்தது.

நாற்பதாம் ஆண்டுகளில் [1840-களில்] மார்க்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றிய தமது விமர்சன நூலை இன்னும் முடித்திடவில்லை. ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதிவரையிலும் இதனைச் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாக, மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனம் பற்றிய தமது நூலின் முதற்பகுதியை முடிப்பதற்கு முன்னதாக வெளிவந்த அவருடைய நூல்கள், 1859-க்குப் பின்னர் எழுதியவற்றிலிருந்து சில விவரங்களில் மாறுபடுகின்றன. அவருடைய பிற்கால நூல்களின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் துல்லியமற்றதாகவும் தவறானதாகவுங்கூடத் தோன்றும் [சில] தொடர்களும் முழு வாக்கியங்களும் அந்நூல்களில் காணப்படுகின்றன. பொது வாசகர்களுக்கான சாதாரணப் பதிப்புகளில், நூலாசிரியருடைய சிந்தனை வளர்ச்சியின் ஒரு கட்டமாக இந்த முந்தைய நோக்குநிலைக்கும் ஓர் இடமுண்டு என்பதும், இந்தப் பழைய நூல்கள் மாற்றம் ஏதுமின்றி மறுபதிப்பாக வெளியிடப்படுவதில் நூலாசிரியருக்கும் வாசகப் பொதுமக்களுக்கும் மறுக்க முடியாத உரிமையுண்டு என்பதும் சொல்லாமலே விளங்கும். அந்த வகையில், நான் இந்நூலில் [எந்த]ஒரு சொல்லையும் மாற்றுவதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். ஆனால், அனேகமாக முழுஅளவில் பிரச்சார நோக்கத்துக்கென்றெ ஒரு [புதிய] பதிப்பு வெளியிடப்படுமெனில், நிலைமை வேறாகி விடுகிறது. இத்தகையதொரு நிலைமையில் மார்க்ஸேகூட, 1849-லிருந்து வெளிவந்த பழைய நூல்களைக் தமது புதிய கருத்தோட்டத்துக்கு இசைவாகத் திருத்தி வெளியிட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. மிகவும் அடிப்படையான அனைத்து விவரங்களிலும் இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டுத் தேவைப்படும் சில மாற்றங்களையும் கூடுதல் விவரங்களையும் இந்தப் பதிப்பில் நான் சேர்க்கும்போது, மார்க்ஸின் மனநிலையிலிருந்தே நான் செயல்படுகிறேன் என்பதை நிச்சயம் உணர்கிறேன்.

ஆகவே, முன்கூட்டியே நான் வாசகர்க்குச் சொல்லிக் கொள்கிறேன்: இந்தப் பிரசுரம் 1849-இல் மார்க்ஸ் எழுதியதுபோன்று இல்லை. ஆனால், அதனை 1891-இல் மார்க்ஸ் எப்படி எழுதியிருப்பாரோ ஏறத்தாழ அதைப்போன்று இருக்கிறது. மேலும், மூல வாசகங்களைக் கொண்ட மிகப்பல பிரதிகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. வருகின்ற காலங்களில் மார்க்ஸ் எழுதிய [அனைத்து] நூல்களின் முழுமையான தொகுப்பில், இதனை மாற்றம் ஏதுமின்றி மீண்டும் என்னால் வெளியிட முடிகிறவரை அவை போதுமானதாக இருக்கும்.

நான் செய்துள்ள மாற்றங்கள் ஒரேயொரு கருத்தைப் பற்றியவை. மூல நூலில், தொழிலாளர் முதலாளியிடமிருந்து பெறும் கூலிக்காகத் தன் உழைப்பை விற்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பதிப்பில், அவர் தன் உழைப்புச் சக்தியை விற்கிறார் என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கான விளக்கத்தை நான் முன்வைத்தாக வேண்டும்: நாங்கள் வெறும் சொல் விளையாட்டாகவோ சொல் வித்தையாகவோ இதைக் கூறவில்லை, மாறாக, அரசியல் பொருளாதாரம் முழுமைக்கும் மிகவும் இன்றியமையாத கருதுகோள்களுள் ஒன்றைப்பற்றி இங்கே பேசுகிறோம் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். படிக்காத தொழிலாளர்கள், எவ்வாறு, நமது கர்வம் பிடித்த ”மெத்தப் படித்த மேதாவிகளைக்” காட்டிலும் மிகமிக மேம்பட்டவர்கள் என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் தாமே உணர்ந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுப்பாய்வுகளையும் படிப்பறிவில்லாத தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியவைத்துவிட முடிகிறது. ஆனால் மெத்தப் படித்த மேதாவிகளுக்கோ இத்தகைய நுட்பமான [பொருளாதாரப் பகுப்பாய்வுப்] பிரச்சினைகள் அவர்தம் வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத புதிர்களாகவே இருக்கின்றன.

தம் ஊழியர்களின் உழைப்பைத் தாம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக எண்ணுவது பட்டறை அதிபரின் அப்போதைய கண்ணோட்டமாகும். [அன்றைய] மரபுவழி அரசியல் பொருளாதாரம், தொழில்துறை நடைமுறையிலிருந்து இந்தக் கண்ணோட்டத்தைக் கடன்வாங்கிக் கொண்டது. பட்டறை அதிபரின் கணக்குப் பதிவு, விலை கணக்கீடு போன்ற வணிக நோக்கங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் போதுமானதாகவே இருந்தது. ஆனால் கண்மூடித்தனமாக அதனை அப்படியே அரசியல் பொருளாதாரத்தில் கையாண்டது, அங்கே அது உண்மையாகவே வியப்பூட்டும் பிழைகளையும் குழப்பங்களையும் உண்டாக்கியது.

அரசியல் பொருளாதாரம், அனைத்துப் பண்டங்களின் விலைகளும், அவற்றுள் “உழைப்பு” எனத் தான் குறிப்பிடும் பண்டத்தின் விலையும், தொடர்ந்து மாறி வருவதைக் கண்கூடாகக் காண்கிறது. விலைகள் தற்செயலாகவே தீர்மானிக்கப்படுகின்றன என்பதே விதியாக உள்ளது எனக் கருதும் அளவுக்குப் பண்டங்களின் விலைகள், பெரும்பாலும் அந்தப் பண்டங்களின் உற்பத்தியுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத மிக வேறுபட்ட சூழ்நிலைகளின் விளைவாக, ஏறி இறங்குவதைக் கண்கூடான ஒரு நிகழ்வாக அரசியல் பொருளாதாரம் காண்கிறது. எனவே, அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானமாகத் தோற்றமெடுத்தவுடனே, பண்டங்களின் விலைகளைத் தீர்மானிப்பதாகத் தோன்றும் இந்தத் தற்செயலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் விதியை, உண்மையில் இந்தத் தற்செயலை ஆட்சிபுரியும் விதியைத் தேடிக் கண்டறிவது அதன் முதற்பணிகளில் ஒன்றாகியது. அவ்வப்போது மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் தொடர்ந்து ஏறியிறங்கி ஊசலாடிக் கொண்டிருக்கும் பண்ட விலைகளுக்கிடையே, எந்த மையப் புள்ளியைச் சுற்றி விலைகளின் இந்த ஏற்றயிறக்கங்களும் ஊசலாட்டங்களும் நிகழ்கின்றனவோ அந்த நிலையான மையப் புள்ளியை அரசியல் பொருளாதாரம் கண்டறிய முயன்றது. சுருங்கக் கூறினால், அரசியல் பொருளாதாரம் தனது தேடலைப் பண்டங்களின் விலையிலிருந்து தொடங்கி, விலையை ஒழுங்குபடுத்தும் விதி என்பதாகப் பண்டங்களின் மதிப்பைக் கண்டறிய முயன்றது. பண்டத்தின் மதிப்பைக் கொண்டே விலையின் ஏற்றயிறக்கங்கள் அனைத்தையும் விளக்கிவிட முடியும் எனவும், இறுதியில் [விலையின் ஏற்றயிறக்கங்கள், ஊசலாட்டங்கள்] அனைத்தையும் பண்டத்தின் மதிப்பில் கொண்டுவந்து நிறுத்திவிட முடியும் எனவும் கருதியது.

ஒரு பண்டத்தில் உட்பொதிந்துள்ள, அப்பண்டத்தின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற உழைப்பே ஒரு பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கிறது என்பதை மரபுவழி அரசியல் பொருளாதாரம் கண்டறிந்தது. இந்த விளக்கத்தோடு அது திருப்தியடைந்தது. நாமும்கூட இப்போதைக்கு இந்த விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், தவறான புரிதல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த விளக்கம் தற்போது முழுக்கவும் போதாமல் ஆகிவிட்டது என்பதை வாசகர்க்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மதிப்பை உருவாக்குகின்ற, உழைப்பின் இப்பண்பியல்பை முதன்முதலில் தீர ஆராய்ந்தவர் மார்க்ஸ்தான். ஒரு பண்டத்தின் உற்பத்திக்குத் தேவையானதாகத் தோன்றக்கூடிய, அல்லது மெய்யாகவே தேவைப்படுகின்ற உழைப்பனைத்தும், செலவிடப்பட்ட உழைப்பின் அளவுக்கு ஈடான அளவுள்ள மதிப்பினை எல்லாச் சூழ்நிலைகளிலும் அப்பண்டத்துக்கு அளித்து விடுவதில்லை என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவரும் மார்க்ஸே ஆவார். ஆகவே, ரிக்கார்டோ போன்ற பொருளாதார அறிஞர்களுடன் சேர்ந்து, ஒரு பண்டத்தின் மதிப்பானது அதன் உற்பத்திக்குத் தேவையான உழைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது என்று இன்றைக்கு நாம் சுருக்கமாகச் சொல்கின்றபோது, மார்க்ஸ் குறிப்பிட்ட விலக்கீடுகளையும் கட்டுப்பாடுகளையும் எப்போதும் கணக்கில் எடுத்துக் கொண்டே கூறுகிறோம். நமது இப்போதைய நோக்கத்துக்கு இவ்வளவு போதும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை, மார்க்ஸ் 1859-இல் எழுதி வெளியிட்ட அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை (A Contribution to the Critique of Political Economy) என்னும் நூலிலும், மூலதனம் (The Capital) முதல்பாகத்திலும் காண முடியும்.

ஆனால், உழைப்பின் மூலம் ஒரு பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் இந்த வழிமுறையைப் பொருளாதார அறிஞர்கள் ”உழைப்பு” என்னும் பண்டத்துக்குப் பயன்படுத்தியவுடனே அவர்கள் ஒரு முரண்பாட்டிலிருந்து தப்பி இன்னொரு முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். ”உழைப்பின்” மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அதில் அடங்கியுள்ள தேவையான உழைப்பினால். ஆனால் ஒரு தொழிலாளியின் ஒரு நாளைய, ஒரு வார, ஒரு மாத, ஓர் ஆண்டின் உழைப்பில் அடங்கியிருக்கும் உழைப்பு எவ்வளவு? உழைப்புதான் அனைத்து மதிப்புகளுக்குமான அளவை எனில், ”உழைப்பின் மதிப்பை” உழைப்பின் அளவாகவே வெளிப்படுத்த முடியும். ஆனால், ஒருமணிநேர உழைப்பின் மதிப்பு பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி நாம் தெரிந்து வைத்திருப்பதெல்லாம், அது ஒரு மணிநேர உழைப்புக்குச் சமம் என்பது மட்டுமே. ஆக, நாம் ஒரு மயிரிழை அளவுகூட நமது குறிக்கோளை நோக்கி முன்னேறவில்லை. ஒரு வட்டத்திலேயே நாம் தொடர்ந்து சுற்றிவந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே, மரபுவழிப் பொருளாதாரம் மற்றொரு வழியில் வரையறுக்க முயன்றது. ஒரு பண்டத்தின் மதிப்பு அதன் உற்பத்திச் செலவுக்குச் சமமாகும் என்று அது கூறியது. அப்படியெனில், உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் பொருட்டுப் பொருளாதார அறிஞர்கள், தருக்கத்தில் சற்றே மோசடி செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். உழைப்பின் உற்பத்திச் செலவை ஆய்ந்தறிவதற்குப் பதிலாக அவர்கள் இப்போது தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆய்ந்தறிய முற்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக உழைப்பின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியாது. ஆனால், தொழிலாளியின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியும். அது காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஆனாலும், குறிப்பிட்ட ஒரு சமுதாய நிலைமையில், குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில், குறிப்பிட்ட ஓர் உற்பத்திப் பிரிவில், ஓரளவு குறுகிய வரம்புகளுக்குள்ளேனும் அதனைக் கணக்கிட்டுக் கூறிவிட முடியும். இன்றைக்கு நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆதிக்கத்தில் வாழ்கின்றோம். இந்த உற்பத்தி முறையின்கீழ், மக்களில் பெரும் எண்ணிக்கை கொண்ட, தொடர்ந்து அதிகரித்துவரும் ஒரு வர்க்கமானது, கூலியைப் பெற்றுக்கொண்டு, கருவிகள், எந்திரங்கள், மூலப்பொருள்கள், பிழைப்பாதாரப் பொருள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களுக்காக வேலை செய்தால் மட்டுமே வாழ முடிகிறது. இந்த உற்பத்தி முறையின் அடிப்படையில் தொழிலாளியின் உற்பத்திச் செலவானது, அவரை வேலை செய்ய முடிந்தவராய் ஆக்கவும், அவருள் வேலைசெய்வதற்கான இத்திறனைப் பராமரிக்கவும், மேலும் முதுமை, நோய் அல்லது மரணம் காரணமாக அவர் [வேலையிலிருந்து] நீங்கிய பின் அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளியைத் தருவதற்கும் – அதாவது, போதுமான எண்ணிக்கையில் தொழிலாளி வர்க்கத்தை இனவிருத்தி செய்வதற்கும் – சராசரியாகத் தேவைப்படும் அளவிலான பிழைப்பாதாரப் பொருள்களின் மொத்தத்துக்குச் (அல்லது அவற்றின் பணவிலைக்கு) சமமாகும்.

இந்தப் பிழைப்பாதாரப் பொருள்களின் பணவிலை நாள் ஒன்றுக்குச் சராசரி 3 ஷில்லிங் என வைத்துக் கொள்வோம். ஆகவே, நமது தொழிலாளி அவருடைய முதலாளியிடமிருந்து நாள்கூலியாக 3 ஷில்லிங் பெறுகிறார். இந்தக் கூலிக்காக முதலாளி அவரை 12 மணிநேரம் வேலை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். மேலும், நம் முதலாளி அனேகமாகக் கீழ்க்காணும் விதத்தில் கணக்கிடுகிறார்: நம் தொழிலாளி (ஒரு கடைசலாளர்) ஓர் எந்திரத்தின் ஒரு பாகத்தைச் செய்ய வேண்டி யுள்ளது. இதை அவர் ஒருநாளில் செய்து முடிப்பதாக வைத்துக்கொள்வோம். மூலப்பொருளுக்கு (தேவையான வடிவில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட இரும்பும் பித்தளையும்) 20 ஷில்லிங் ஆகிறது. நீராவி எந்திரத்துக்குச் செலவாகும் நிலக்கரி, அவ்வெந்திரத்தின் தேய்மானம், மேலும் நமது தொழிலாளி வேலை செய்யும் கடைசல் எந்திரம் மற்றும் பிற கருவிகளுக்கு ஏற்படும் தேய்மானம் ஆகியவற்றை, ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்குக் கணக்கிட்டால் 1 ஷில்லிங் ஆகிறது. நாம் வைத்துக் கொண்டபடி ஒரு நாளைக்கான கூலி 3 ஷில்லிங். ஆக மொத்தம் நம் எந்திரப் பாகத்தைத் தயாரிக்க 24 ஷில்லிங் ஆகிறது.

ஆனால், முதலாளி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சராசரியாக 27 ஷில்லிங் தனக்குக் கிடைக்குமாறு, அதாவது அவரது முதலீட்டைக் காட்டிலும் 3 ஷில்லிங் கூடுதலாகக் கிடைக்குமாறு விலை வைக்கிறார்.

முதலாளி எடுத்துக்கொண்ட இந்த 3 ஷில்லிங் எங்கிருந்து வந்தது? மரபுவழிப் பொருளாதாரத்தின் கூற்றுப்படி, சராசரியாகப் பார்த்தால், பண்டங்கள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன. அதாவது, அவற்றில் அடங்கியுள்ள அதன் உற்பத்திக்குத் தேவையான உழைப்பின் அளவுக்கேற்ற விலைகளில் விற்கப்படுகின்றன. ஆகவே, நம் எந்திரப் பாகத்தின் சராசரி விலையான 27 ஷில்லிங் என்பது அதன் மதிப்புக்குச் சமம் ஆகும். அதாவது, அதில் உள்ளடங்கியுள்ள உழைப்புக்குச் சமம் ஆகும். ஆனால், இந்த 27 ஷில்லிங்கில் 21 ஷில்லிங், கடைசலாளர் வேலை செய்வதற்கு முன்பே இருந்த மதிப்புகளைக் குறிப்பதாகும். 20 ஷில்லிங் மூலப்பொருள்களில் அடங்கியிருந்தது; 1 ஷில்லிங் வேலையின்போது நுகரப்பட்ட எரிபொருளிலும், வேலையில் பயன்படுத்தப்பட்டு, அந்த அளவுக்குத் திறன் குறைந்துபோன எந்திரங்கள், கருவிகளின் தேய்மானத்திலும் அடங்கியிருந்தது. 6 ஷில்லிங் எஞ்சியுள்ளது. இத்தொகை மூலப்பொருளின் மதிப்புடன் கூட்டப் பெற்றுள்ளது. ஆனால் நமது பொருளாதார அறிஞர்களின் அனுமானத்தின்படி இந்த 6 ஷில்லிங், தொழிலாளியால் மூலப் பொருளுடன் சேர்க்கப்பட்ட உழைப்பிலிருந்துதான் தோன்ற முடியும். இதன்படி, தொழிலாளியின் 12 மணிநேர உழைப்பு 6 ஷில்லிங் பெறுமான ஒரு புதிய மதிப்பினை உருவாக்கியுள்ளது. ஆக, தொழிலாளியின் 12 மணிநேர உழைப்பின் மதிப்பு 6 ஷில்லிங்குக்குச் சமமானதாகும். அப்பாடா, ஒருவாறாக ”உழைப்பின் மதிப்பு” என்ன என்பதை நாம் கண்டுபிடித்துவிட்டோம்.

”இருங்கள், இருங்கள்!” என்று நமது கடைசலாளர் கூவுகிறார். ”ஆறு ஷில்லிங்கா? ஆனால் நான் 3 ஷில்லிங் மட்டும்தானே பெற்றுக் கொண்டேன்! எனது 12 மணிநேர உழைப்பின் மதிப்பு 3 ஷில்லிங்தான் என்று என் முதலாளி தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறாரே? 6 ஷில்லிங் தரவேண்டுமென நான் கேட்டால் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாரே. இந்தக் கதைக்கு என்ன விளக்கம் சொல்வீர்கள்?”

இதற்கு முன்பு நாம் உழைப்பின் மதிப்பை அறியப்போய் ஒரு நச்சு வட்டத்தில் சிக்கிக் கொண்டோம் என்றால், இப்போது நாம் நிச்சயமாக ஒரு தீர்க்க முடியாத முரண்பாட்டுக்குள் நேரடியாகத் தள்ளப்பட்டுக் கிடக்கிறோம். உழைப்பின் மதிப்பைக் கண்டறியப் புறப்பட்டோம். நமக்குத் தேவையான அளவுக்கு அதிகமாகவே கண்டுபிடித்தோம். 12 மணிநேர உழைப்பின் மதிப்பு தொழிலாளிக்கு 3 ஷில்லிங்காக இருக்க, அதுவே முதலாளிக்கு 6 ஷில்லிங்காக உள்ளது. இந்த 6 ஷில்லிங்கில் 3 ஷில்லிங்கை உழைப்பவனுக்குக் கூலியாகக் கொடுத்துவிட்டு, மீதி 3 ஷில்லிங்கை தனக்கென எடுத்துக்கொள்கிறார். இதன்படி பார்த்தால், உழைப்பு ஒரு மதிப்பையல்ல, இரண்டு மதிப்புகளைக் கொண்டுள்ளது, அதுவும் மிக வேறுபட்ட இரண்டு மதிப்புகளைக் கொண்டுள்ளது.

இங்கே பணத்தில் குறிக்கப்படும் மதிப்புகளை உழைப்பு–நேரமாக நாம் மாற்றியவுடன் இந்த முரண்பாடு இன்னும் மிகுந்த அபத்தமானதாக ஆகிவிடுகிறது. 12 மணிநேர உழைப்பின்மூலம் 6 ஷில்லிங் பெறுமான ஒரு புதிய மதிப்பு தோற்றுவிக்கப்படுகிறது. ஆக, 6 மணிநேரத்தில் தோற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு 3 ஷில்லிங்குக்குச் சமமானது. 12 மணிநேர உழைப்புக்காகத் தொழிலாளி பெறுகின்ற தொகை இது. 12 மணிநேர உழைப்புக்குக் கூலியாக உழைப்பாளி 6 மணிநேர உற்பத்திக்கு ஈடான தொகையையே பெறுகின்றார். இதிலிருந்து நாம் கீழ்க்காணும் இரண்டு முடிபுகளுள் ஒன்றுக்குத் தள்ளப்படுகிறோம்: உழைப்பு இரு மதிப்புகளைக் கொண்டுள்ளது; அவற்றுள் ஒன்று மற்றதைவிட இருமடங்கு பெரியது. அல்லது 12, 6-க்குச் சமம்! இரண்டு முடிபுகளிலும் நமக்குக் கிடைப்பது சுத்தமான அபத்தங்களே.

”உழைப்பை” அல்லது ”உழைப்பின் மதிப்பை” வாங்குவதாகவும் விற்பதாகவும் நாம் பேசிக் கொண்டிருக்கும்வரை என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபட முடியாது. அரசியல் பொருளாதார அறிஞர்களுக்கும் இதுவேதான் நேர்ந்தது. மரபுவழி அரசியல் பொருளாதாரத்தின் கடைசி அவதாரமான ரிக்கார்டோவியக் கருத்தமைப்பானது, முக்கியமாக இந்த முரண்பாட்டுக்குத் தீர்வுகாண முடியாமல்தான் தகர்ந்து போனது. மரபுவழி அரசியல் பொருளாதாரம் முட்டுச் சந்தில் வந்து நிற்க வேண்டியதாயிற்று. இந்த முட்டுச் சந்திலிருந்து மீண்டு வெளிவரப் பாதையைக் கண்டுபிடித்த மனிதர் கார்ல் மார்க்ஸ் ஆவார்.

பொருளாதார அறிஞர்கள் ”உழைப்பின்” உற்பத்திச் செலவாகக் கருதியது, உண்மையில் உயிருள்ள தொழிலாளியின் உற்பத்திச் செலவாகுமே அல்லாது “உழைப்பின்” உற்பத்திச் செலவாகாது. மேலும், இந்தத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல. ”தொழிலாளி உண்மையில் உழைப்பைச் செலுத்தத் தொடங்கியதுமே, உழைப்பு அவரின் உடைமையாக இல்லாமல் போகிறது. எனவே, அவரால் அதை இனிமேல் விற்க முடியாது” என்று மார்க்ஸ் எழுதினார். அதிகம் போனால் அவர், தன் வருங்கால உழைப்பை வேண்டுமானால் விற்கலாம் – அதாவது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்து முடிப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். ஆனால் இதன்படியும் அவர் உழைப்பை விற்கவில்லை (முதலில் செய்து முடிக்கப்பட வேண்டும்) [இல்லையேல் விற்கப்பட்டதாகக் கொள்ள முடியாது]. குறிப்பிட்ட கூலித் தொகைக்காகத் தன் உழைப்புச் சக்தியைக் குறிப்பிட்ட நேரத்துக்கு (நேரக்கூலியாக இருப்பின்) அல்லது குறிப்பிட்ட ஒரு பணியை செய்து முடிப்பதற்கு (வேலைக்கூலியாக இருப்பின்) முதலாளியின் பயன்பாட்டில் விட்டுவைக்கிறார். அவர் தன் உழைப்புச் சக்தியை ஈடு வைக்கிறார் அல்லது விற்கிறார். ஆனால் இந்த உழைப்புச் சக்தி தொழிலாளியின் உடலோடு ஒன்றி வளர்ந்தது, அதிலிருந்து பிரிக்க முடியாதது. எனவே, அதன் உற்பத்திச் செலவும் அவருடைய உற்பத்திச் செலவும் ஒன்றாகி விடுகின்றன. உழைப்பின் உற்பத்திச் செலவு எனப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுவது உண்மையில் தொழிலாளியின் உற்பத்திச் செலவுதான். ஆக, அவருடைய உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவேதான். இவ்வாறாக, நாம் உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவிலிருந்து, உழைப்புச் சக்தியின் மதிப்புக்குத் திரும்பிச் சென்று, ”உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும்” பற்றிய அத்தியாயத்தில் [மூலதனம் முதல் தொகுதி] மார்க்ஸ் வரையறுத்துள்ளதுபோலக் குறிப்பிட்ட அளவுள்ள உழைப்புச் சக்தியின் உற்பத்திக்குத் தேவையான, சமுதாய உழைப்பின் அளவை நிர்ணயிக்க முடியும்.

இப்போது, தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்ற பிறகு நடப்பது என்ன? அதாவது, நேரக்கூலி அல்லது வேலைக்கூலி எதுவாக இருப்பினும், தொழிலாளி கூலிக்காகத் தன் உழைப்புச் சக்தியை முதலாளியின் வசம் விட்டுவைத்தபின் நடப்பது என்ன? தொழிலாளியை முதலாளி தம் பட்டறை அல்லது தொழிற்சாலைக்கு இட்டுச் செல்கிறார். வேலைக்குத் தேவைப்படும் மூலப்பொருள்கள், துணைப்பொருள்கள் (நிலக்கரி, சாயப்பொருள்கள் முதலியன), கருவிகள், எந்திரங்கள் ஆகிய அனைத்தும் தயார் நிலையில் அங்கே உள்ளன. தொழிலாளி அங்கே வேலை செய்யத் தொடங்குகிறார். அவருடைய நாள்கூலி மேலே குறிப்பிட்டதுபோல 3 ஷில்லிங் ஆகும். இதை அவர் நாள்கூலியாகப் பெற்றாலும் வேலைக்கூலியாகப் பெற்றாலும் ஒன்றுதான். முன்புபோலவே தொழிலாளி 12 மணிநேரத்தில் தன் உழைப்பின்மூலம், பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களின் மதிப்போடு 6 ஷில்லிங் பெறுமானமுள்ள புதிய மதிப்பைச் சேர்ப்பதாகக் கொள்வோம். செய்து முடிக்கப்பட்ட பொருளை விற்பதன்மூலம் முதலாளி இந்தப் புதிய மதிப்பைப் பணமாக்குகிறார். இந்தப் புதிய மதிப்பிலிருந்து முதலாளி தொழிலாளிக்கு அவருக்குரிய 3 ஷில்லிங்கைத் தருகிறார். எஞ்சிய 3 ஷில்லிங்கைத் தனக்காக எடுத்துக் கொள்கிறார். 12 மணிநேரத்தில் தொழிலாளி 6 ஷில்லிங் பெறுமான மதிப்பைத் தோற்றுவிக்கிறார் எனில், 6 மணிநேரத்தில் அவர் 3 ஷில்லிங் பெறுமான மதிப்பைத் தோற்றுவிக்கிறார். இதன்படி பார்த்தால், 6 மணிநேரம் முதலாளிக்காக வேலை செய்ததுமே தொழிலாளி தான் கூலியாகப் பெற்ற 3 ஷில்லிங்குக்கு ஈடான மதிப்பை முதலாளிக்குத் திருப்பித் தந்துவிடுகிறார். 6 மணிநேர உழைப்புக்குப் பிறகு இருவருக்கிடையிலும் கணக்குத் தீர்ந்துவிடுகிறது. இருவரில் எவரும் மற்றவருக்குச் சல்லிக் காசுகூடத் தர வேண்டியதில்லை.

”இருங்கள், இருங்கள்!” இப்போது முதலாளி கூவுகின்றார். ”ஒரு முழு நாளுக்கு, அதாவது 12 மணிநேரத்துக்குத் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தினேன். ஆனால், 6 மணிநேரம் என்பது அரை நாளே ஆகும். ஆகவே, மீதி 6 மணிநேரம் முடியும்வரை தொடர்ந்து வேலை செய்தாக வேண்டும் – அப்போதுதான் எங்களிடையே கணக்குத் தீரும்!” என்கிறார். உண்மையில், தொழிலாளி தானாகவே மனமுவந்து செய்துகொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டவர் ஆகிறார். அதன்படி, 6 மணிநேர உழைப்பு மட்டுமே செலவாகும் ஓர் உழைப்புப் பொருளுக்காக, 12 முழு மணிநேரம் வேலை செய்யத் தன்னை உட்படுத்திக் கொள்கிறார்.

வேலைக்கூலியிலும் இவ்வாறுதான் ஆகிறது. 12 மணிநேரத்தில் நம் தொழிலாளி ஒரு பண்டத்தின் 12 உருப்படிகளைச் செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வோர் உருப்படிக்கும் மூலப்பொருள்களுக்கு 1 ஷில்லிங், தேய்மானத்துக்கு 1 ஷில்லிங் என 2 ஷில்லிங் செலவாகிறது எனவும், உருப்படி 2.5 ஷில்லிங்குக்கு விற்கப்படுகிறது எனவும் கொள்வோம். நமது முந்தைய அனுமானத்தின்படி, முதலாளி உருப்படி ஒன்றுக்கு .25 வீதம் தொழிலாளிக்குக் கூலி தருகிறார் எனில், 12 உருப்படிகளுக்கு 3 ஷில்லிங் தருவார். இதைச் சம்பாதிக்கத் தொழிலாளிக்கு 12 மணிநேரம் தேவைப்படுகிறது. 12 உருப்படிகளை விற்று முதலாளி 30 ஷில்லிங் பெறுகிறார். மூலப்பொருள்களுக்கும் தேய்மானத்துக்கும் 24 ஷில்லிங்கைக் கழித்தபின் 6 ஷில்லிங் எஞ்சுகிறது. அதிலிருந்து 3 ஷில்லிங்கைக் கூலியாகத் தந்துவிட்டு, மீதமுள்ள 3 ஷில்லிங்கைத் தாம் எடுத்துக்கொள்கிறார். முன்புபோலவே அதே முடிவு! இதிலும் தொழிலாளி 6 மணிநேரம் தமக்காக உழைக்கிறார், அதாவது தமது கூலிக்காக உழைக்கிறார் (12 மணியில் ஒவ்வொரு மணியிலும் அரை மணி வீதம்). 6 மணிநேரம் முதலாளிக்காக உழைக்கிறார்.

மிகச்சிறந்த பொருளாதார அறிஞர்கள், 'உழைப்பின்' மதிப்பிலிருந்து தொடங்கிய போதெல்லாம், தீர்வு எட்டப்படாமல் நின்றுபோன சிக்கல், நாம் உழைப்புச் சக்தியைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டவுடனே மறைந்துவிடுகிறது. உழைப்புச் சக்தி என்பது நம்முடைய இன்றைய முதலாளித்துவச் சமுதாயத்தில், ஒரு பண்டமாக இருக்கிறது. வேறெந்தப் பண்டத்தையும்போன்று இதுவும் ஒரு பண்டம் எனினும், இது மிகுந்த சிறப்பியல்பு கொண்ட பண்டமாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, மதிப்பை உருவாக்கும் சக்தியாகவும், மதிப்பின் தோற்றுவாயாகவும், மேலும், தக்கபடி பயன்படுத்தப்படும்போது, தான் கொண்டுள்ள மதிப்பைக் காட்டிலும் கூடுதலான மதிப்பைத் தோற்றுவிக்கும் மூலமாகவும் விளங்கும் சிறப்பியல்பைக் கொண்டுள்ளது. தற்போதைய உற்பத்தி நிலையில் மனித உழைப்புச் சக்தியானது ஒரு நாளில், அது கொண்டுள்ள மதிப்பைவிட அதிகமான, அதற்கான செலவு மதிப்பைவிட அதிகமான மதிப்பை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்தும், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பப் புத்தாக்கத்தைத் தொடர்ந்தும், அதன் அன்றாடச் செலவுபோக மிஞ்சும் அதன் அன்றாட உற்பத்தியின் உபரி மதிப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, ஒருபுறம் ஒரு வேலைநாளில், தொழிலாளி தம் நாள்கூலிக்கு ஈடானதை உற்பத்தி செய்கின்ற வேலைநேரப் பகுதி குறைகிறது. மறுபுறத்தில், ஊதியமின்றி முதலாளிக்கு வழங்கித் தீர வேண்டிய வேலைநேரப் பகுதியோ அதிகரிக்கிறது.

நம்முடைய ஒட்டுமொத்த நவீன சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு இதுதான்: தொழிலாளி வர்க்கம் மட்டுமே அனைத்து மதிப்புகளையும் உற்பத்தி செய்கிறது. ஏனெனில், மதிப்பு என்பது உழைப்பைக் குறிக்கும் மற்றொரு பெயரே ஆகும். நம்முடைய இன்றைய முதலாளித்துவச் சமுதாயத்தில், குறிப்பிட்ட ஒரு பண்டத்தில் உள்ளடங்கியுள்ள, சமூக ரீதியில் அப்பண்டத்தை உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பின் அளவைக் குறிக்கப் பயன்படும் பெயரே ஆகும். ஆனால், தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் இந்த மதிப்புகள் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதற்கு வகைசெய்யும் மூலப்பொருள்கள், எந்திரங்கள், கருவிகள், நிதி ஆகியவற்றின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆக, தொழிலாளி வர்க்கம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் ஒட்டுமொத்தத் திரளில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. மறுபகுதியை முதலாளித்துவ வர்க்கம் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. அதிகப்பட்சம் நிலவுடைமை வர்க்கத்துடன் மட்டும் அதனைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் சற்றுமுன் பார்த்தவாறு, முதலாளித்துவ வர்க்கம் வைத்துக்கொள்ளும் இந்தப் பங்கு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் புத்தாக்கத்தையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் பங்கானது (ஒரு நபருக்குக் கிடைப்பது) மிகக் குறைவாகவும் மிக மெதுவாகவும் அதிகரிக்கிறது. அல்லது அதிகரிக்காமலே உள்ளது. சில நிலைமைகளில் குறையவும் செய்கிறது.

ஆனால், மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் ஒன்றை இன்னொன்று மிஞ்சுகின்ற இந்தக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் தொடர்ந்து, இதற்குமுன் கண்டு கேட்டிராத அளவுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற்பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும். ஒருபுறம், அளவிட முடியாத செல்வமும், வாங்குவோரால் சமாளிக்க முடியாத அளவுக்குத் தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களும் [குவிந்து கிடக்க], மறுபுறம், சமுதாயத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் பாட்டாளிகளாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக, அவ்வாறு தேவைக்கு அதிகமாகக் குவியும் உற்பத்திப் பொருள்களைத் தங்களுக்கென உடைமையாக்கிக் கொள்ள இயலாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளனர். அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து சொற்ப அளவுக்கே பாதுகாக்கப் படுகின்றனர் அல்லது ஒருசிறிதும் பாதுகாப்பே இல்லாமல் இருக்கின்றனர்.

இத்தகு நிலை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அபத்தமாகி வருகிறது. மென்மேலும் தேவையற்றதாகவும் ஆகிவருகிறது. இந்நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும். இது ஒழிக்கப்படவும் முடியும். இன்றைய வர்க்க வேறுபாடுகள் மறைந்துபோன ஒரு புதிய சமுதாய அமைப்புமுறை சாத்தியமே. பிற வகையில் சற்றே பின்தங்கியதாயினும் தார்மீக ரீதியில் மிகவும் பயனுள்ள ஒரு குறுகிய இடைப்பட்ட வளர்ச்சிக் கட்டத்துக்குப் பிறகு, அப்புதிய சமுதாய அமைப்பில், வாழ்வாதாரச் சாதனங்களும், வாழ்வைச் சுவைத்து இன்புறுவதற்கான சாதனங்களும், அனைத்து வகையான உடல், உள்ளம் சார்ந்த ஆற்றல்களின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்குமான சாதனங்களும் போதுமான அளவுக்குக் கிடைக்கும். நம்மிடம் இப்போதும் இருக்கின்ற பிரம்மாண்ட சமுதாய உற்பத்திச் சக்திகளைத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதன் மூலமும், அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதன் மூலமும், வேலைசெய்யும் கடப்பாட்டினை அனைவர் மீதும் சமமாகச் சுமத்துவதன் மூலமும் இதனைச் சாதிக்க முடியும். இந்தப் புதிய சமுதாய அமைப்பை வென்றெடுக்கத் தொழிலாளர்கள் மென்மேலும் வைராக்கியம் கொண்டோராய் வளர்ந்து வருகின்றனர் என்பது, நாளைக்கு இந்த மேதின விடியலிலும், மே 3-ஆம் நாள் ஞாயிறன்றும் மாகடலின் இரு புறமும் நிரூபித்துக் காட்டப்படும். [1891-ஆம் ஆண்டின் மேதினக் கொண்டாட்டங்களை ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்].

ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஏப்ரல் 30, 1891.

அடுத்த பகுதி: நூலின் முகப்புரை

கூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி