வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி
கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்குமுள்ள உறவு
முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்கும் இடையேயான பரிவர்த்தனையில் நடைபெறுவது என்ன?
தொழிலாளி தம் உழைப்புச் சக்திக்குப் பரிவர்த்தனையாகப் பிழைப்பாதாரப் பொருள்களைப் பெறுகிறார். ஆனால் முதலாளி தம் பிழைப்பாதாரப் பொருள்களுக்குப் பரிவர்த்தனையாகத் தொழிலாளியின் உழைப்பை, தொழிலாளியின் உற்பத்தித் திறனுள்ள செயல்பாட்டை, தொழிலாளியின் படைப்பாக்க ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார். படைப்பாக்க ஆற்றல் மூலம் தொழிலாளி தாம் நுகர்வதைப் பதிலீடு செய்வது மட்டுமின்றி, திரட்டி வைக்கப்பட்ட உழைப்புக்கு இதற்குமுன் இருந்ததைவிட மிகப்பெரும் மதிப்பை அளிக்கிறார். தொழிலாளி முதலாளியிடமிருந்து பிழைப்பாதாரப் பொருள்களின் ஒருபகுதியைப் பெற்றுக் கொள்கிறார். இந்தப் பிழைப்பாதாரப் பொருள்கள் தொழிலாளிக்கு எதற்காகப் பயன்படுகின்றன? உடனடி நுகர்வுக்காக. ஆனால், அப்பொருள்களினால் நான் உயிர்வாழும் அந்த நேரத்தைப் புதிய பிழைப்பாதாரப் பொருள்களை உற்பத்தி செய்யவும், நுகர்வில் இழக்கப்பட்ட மதிப்புகளுக்குப் பதிலீடாகப் புதிய மதிப்புகளை என் உழைப்பால் உண்டாக்கவும் நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், பிழைப்பாதாரப் பொருள்களை நான் நுகர்ந்தவுடனேயே, மீட்க முடியாதவாறு அவற்றை நான் இழந்துவிடுகிறேன். ஆனால், இந்தப் புனிதமான புனருற்பத்திச் சக்தியைத்தான், தொழிலாளி தாம் பெறுகின்ற பிழைப்பாதாரப் பொருள்களுக்குப் பரிவர்த்தனையாக முதலாளியிடம் ஒப்படைக்கிறார். இதனால், தனக்குப் பயனின்றி அச்சக்தியை அவர் இழந்துவிடுகிறார்.
ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்: தொழிலாளி ஒருவர் ஒரு ஷில்லிங் கூலிக்காக ஒரு விவசாயியின் நிலத்தில் நாள்முழுதும் வேலை செய்கிறார். அதன்மூலம் விவசாயிக்கு இரண்டு ஷில்லிங் கிடைக்கும்படி செய்கிறார். விவசாயி தாம் நாள்-தொழிலாளிக்குத் தந்த கூலிக்கு ஈடான தொகையைப் பெறுவது மட்டுமின்றி, [வருமானத்தை] இரண்டுமடங்கு ஆக்கிக் கொள்கிறார். ஆக, விவசாயி நாள்-தொழிலாளிக்குத் தந்த ஒரு ஷில்லிங் பணத்தைப் பலனுள்ள, உற்பத்தித் திறனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்கிறார். எவ்வாறெனில், நாள்-தொழிலாளியின் உழைப்புச் சக்தியை வாங்க அவர் செலவழித்த ஒரு ஷில்லிங், அதைப்போல இருமடங்கு மதிப்புள்ள விளைபொருள்களை நிலத்தில் உருவாக்குகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக, நாள்-தொழிலாளி தன் உற்பத்திச் சக்தியின் பலன்களை விவசாயியிடம் ஒப்படைத்துவிட்டு, அவ்வுற்பத்திச் சக்திக்குப் பதிலீடாகப் பெறும் ஒரு ஷில்லிங்கைப் பிழைப்பாதாரப் பொருள்களுக்குச் செலவழிக்கிறார். அவ்வாறு பெறும் பிழைப்பாதாரப் பொருள்களை அனேகமாக விரைவில் நுகர்ந்து தீர்க்கிறார். இவ்வாறு, ஒரு ஷில்லிங் இரு வழிகளில் நுகரப்படுகிறது: புனருற்பத்தி முறையில் முதலாளியால் நுகரப்படுகிறது. எப்படியெனில், இரண்டு ஷில்லிங் ஈட்டித் தந்த உழைப்புச் சக்திக்காக அது பரிவர்த்தனை செய்துகொள்ளப்பட்டது. உற்பத்தித் திறனில்லாத முறையில் தொழிலாளியால் நுகரப்படுகிறது. எப்படியெனில், அதனைப் பரிவர்த்தனை செய்து பெறப்பட்ட பிழைப்பாதாரப் பொருள்கள் [நுகரப்பட்டு] என்றைக்குமாய் அழிந்து போகின்றன. விவசாயியுடன் மீண்டும் இதே பரிவர்த்தனையில் ஈடுபட்டால் மட்டுமே தொழிலாளி இந்த மதிப்பைத் திரும்பப் பெற முடியும். ஆக, மூலதனத்துக்கு முன்தேவை கூலியுழைப்பு; கூலியுழைப்புக்கு முன்தேவை மூலதனம். அவை ஒன்றுக்கொன்று நிபந்தனையாய் அமைகின்றன; ஒன்று மற்றதன் இருப்புக்குக் காரணமாகிறது.
பஞ்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி பஞ்சை மட்டுமா உற்பத்தி செய்கிறார்? இல்லை. மூலதனத்தையும் உற்பத்தி செய்கிறார். அவர் மதிப்புகளை உற்பத்தி செய்கிறார். அம்மதிப்புகள் [மீண்டும்] புதிதாக, அவரிடம் வேலை வாங்கவும், அதன்மூலம் புதிய மதிப்புகளைத் தோற்றுவிக்கவும் செய்கின்றன.
மூலதனம், உழைப்புச் சக்திக்காகத் தன்னைப் பரிவர்த்தனை செய்துகொள்வதன் மூலம்தான், கூலியுழைப்பைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதன்மூலம்தான் தன்னைப் பெருக்கிக்கொள்ள முடியும். கூலித் தொழிலாளியின் உழைப்புச் சக்தி, மூலதனத்தை அதிகரிக்கச் செய்வதன்மூலம்தான், தன்னை அடிமைப்படுத்தும் அதே சக்தியை வலிமையாக்குவதன் மூலம்தான், தன்னை மூலதனத்துக்காகப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். எனவே, மூலதனத்தின் அதிகரிப்பு பாட்டாளி வர்க்கத்தின், அதாவது தொழிலாளி வர்க்கத்தின் அதிகரிப்பு ஆகும்.
எனவே, முதலாளியின் நலனும் தொழிலாளியின் நலனும் ஒன்றே என முதலாளித்துவ வர்க்கமும் அதன் பொருளாதார அறிஞர்களும் சாதிக்கின்றனர். உண்மைதான்! மூலதனம் தொழிலாளிக்குத் தொடர்ந்து வேலை தராவிடில் தொழிலாளி அழிந்து போவான். மூலதனம் உழைப்புச் சக்தியைச் சுரண்டாவிடில், மூலதனம் அழிந்து போகும். உழைப்புச் சக்தியைச் சுரண்டுவதற்காக மூலதனம் அதை விலைகொடுத்து வாங்கியாக வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மூலதனம், அதாவது உற்பத்தித் திறனுள்ள மூலதனம் எந்த அளவுக்கு விரைவாக அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குத் தொழில்துறை செழித்தோங்குகிறது; முதலாளித்துவ வர்க்கம் மேலும் தம்மை மேம்படுத்திக் கொள்கிறது; வணிகம் சிறப்புறுகிறது; அதிகத் தொழிலாளர்கள் முதலாளித்துவத் தேவைக்குச் சேவகம் புரிகின்றனர்; அதிக விலைக்குத் தொழிலாளி தன்னை விற்றுக்கொள்கிறான். எனவே, உற்பத்தித் திறனுள்ள மூலதனம் சாத்தியமான அளவுக்கு அதிவேக வளர்ச்சி காண்பதே, தொழிலாளிக்குச் சகிக்கத்தக்க வாழ்க்கைக்கான தவிர்க்கவியலா நிபந்தனையாகும்.
ஆனால், உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி என்பது எது? தற்போதைய உழைப்பின்மீது, திரட்டி வைக்கப்பட்ட உழைப்பினுடைய ஆதிக்கத்தின் வளர்ச்சி; தொழிலாளி வர்க்கத்தின்மீது முதலாளித்துவ வர்க்கம் செலுத்தும் ஆட்சியதிகாரத்தின் வளர்ச்சி. கூலியுழைப்பு, தன்மீது ஆட்சி செலுத்தும் அன்னியச் செல்வத்தை, தனக்கு எதிரான சக்தியாகிய மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. இதனால் அதன் வேலைவாய்ப்புச் சாதனங்கள், அதாவது பிழைப்பாதாரப் பொருள்கள் அதனிடமே திரும்ப வந்து சேர்கின்றன. கூலியுழைப்பு திரும்பவும் மூலதனத்தின் ஒரு பகுதியாக ஆகின்ற நிலையில், அது திரும்பவும் மூலதனத்தை முடுக்கிவிடப்பட்ட விரிவாக்க இயக்கத்துக்கு உந்திவிடும் நெம்புகோலாய் ஆகிறது.
மூலதனத்தின் நலன்களும் தொழிலாளர்களுடைய நலன்களும் ஒரே மாதிரியானவை என்று கூறுவதன் பொருள் இதுதான்: மூலதனமும் கூலியுழைப்பும் ஒரே உறவின் இரு பக்கங்களாகும். கொள்ளை வட்டிக்காரரும் ஊதாரிக் கடனாளியும் ஒருவருக்கொருவர் நிபந்தனையாய் அமைவதுபோல மூலதனமும் கூலியுழைப்பும் ஒன்றுக்கொன்று நிபந்தனையாய் அமைகின்றன.
கூலித் தொழிலாளி கூலித் தொழிலாளியாக இருக்கும்வரை அவருடைய வாழ்க்கை மூலதனத்தைச் சார்ந்துள்ளது. தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையேயான பொதுநலன் என்று பெரிதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதன் பொருள் இதுதான்.
மூலதனம் பெருகுமெனில் கூலியுழைப்பின் அளவு பெருகுகிறது. கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சுருங்கக் கூறின், மூலதனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகத் திரளான மனிதர்களின்மீது விரிந்து பரவுகிறது.
மிகவும் சாதகமான நிகழ்வையே எடுத்துக் கொள்வோம்: உற்பத்தித் திறனுள்ள மூலதனம் பெருகும்போது, உழைப்புக்கான தேவை வளர்கிறது. எனவே, அது உழைப்புச் சக்தியின் விலையை அதாவது கூலியை உயர்த்துகிறது.
ஒரு வீடு பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்கலாம். அண்டை வீடுகளும் அதேபோலச் சிறிதாக இருக்கும்வரை ஒரு குடியிருப்புக்கான அனைத்து சமூகத் தேவைகளையும் அது நிறைவு செய்கிறது. ஆனால், அச்சிறு வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாளிகை எழட்டும், உடனே சிறு வீடு ஒரு குடிசையாகக் குறுகிப் போகும். அதில் வசிப்பவர் காப்பாற்றிக் கொள்ள சமூக அந்தஸ்து என்று எதுவுமே இருக்காது, அல்லது மிகவும் சொற்பமாக இருக்கும் என்பதை அச்சிறு வீடு இப்போது தெளிவுபடுத்துகிறது. நாகரிக வளர்ச்சிப்போக்கில் அச்சிறு வீடு எவ்வளவுதான் உயரமாக வளர்ந்தாலும், அருகிலுள்ள மாளிகையும் அதே அளவுக்கோ, அதைவிடவும் அதிக அளவுக்கோ வளருமெனில், ஒப்பீட்டளவில் சிறிதாயிருக்கும் வீட்டில் வசிப்பவர், தான் மேலும் வசதியற்றவராகவும், மேலும் திருப்தியற்றவராகவும், தன்னுடைய சிறு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மேலும் நெரிசலில் வாழ்வதாகவே உணர்வார்.
கூலியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வு காண, உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் விரைவான வளர்ச்சி முன்தேவையாகும். உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் விரைவான வளர்ச்சி அதே அளவுக்கு விரைவாகச் செல்வம், ஆடம்பரம், சமூகத் தேவைகள், சமூக நுகர்வின்பம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, தொழிலாளியின் நுகர்வின்பமும் அதிகரிக்கிறது. என்றாலும், தொழிலாளிக்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய சமூக மனநிறைவு, அவருக்கு எட்டாத உயரத்துக்கு அதிகரித்துவிட்ட முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிட்டாலும் சரி, பொதுவாகச் சமுதாய வளர்ச்சிக் கட்டத்துடன் ஒப்பிட்டாலும் சரி, குறைந்துவிடுகிறது. நமது விருப்பங்களும் இன்பங்களும் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. எனவே, அவற்றை நாம் சமுதாயத்தைக் கொண்டே அளவிடுகிறோம். அவற்றை நிறைவு செய்யப் பயன்படும் பொருள்களோடு ஒப்பிட்டு அவற்றை அளவிடுவதில்லை. இவை சமூக இயல்பு கொண்டவை என்பதால், இவை ஒப்பியல்பு உடையனவாக உள்ளன.
கூலியானது, அதற்குப் பரிவர்த்தனையாகப் பெறக்கூடிய பண்டங்களின் மொத்த அளவால் மட்டும் ஒருக்காலும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பிற காரணிகளும் இந்தச் சிக்கலுக்குள் வந்துவிடுகின்றன. தொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக நேரடியாகப் பெறுவது, குறிப்பிட்ட அளவு பணத்தொகையாகும். வெறும் இந்தப் பண விலையால் மட்டுமா கூலி நிர்ணயிக்கப்படுகிறது?
16-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவில் வளம்மிக்க, மிகவும் எளிதாகத் தோண்டி எடுக்கக்கூடிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, ஐரோப்பாவில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்தது. எனவே, பிற பண்டங்களுடன் ஒப்பிடுகையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு வீழ்ந்தது. தொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக முன்போல அதே அளவு வெள்ளி நாணயத்தையே பெற்றனர். அவர்களுடைய உழைப்பின் பணவிலை மாறாமல் அப்படியே இருந்தது. எனினும், அவர்களின் கூலி குறைந்துபோனது. ஏனெனில், [வெள்ளியின் மதிப்புக் குறைந்துபோனதால்] அதே அளவு வெள்ளியைக் கொடுத்து, முன்னிலும் குறைவான அளவிலேயே பிற பண்டங்களைப் பெற்றனர். 18-ஆம் நூற்றாண்டில் மூலதனத்தின் வளர்ச்சியையும், முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியையும் ஊக்குவித்த சூழ்நிலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இன்னொரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1847-ஆம் ஆண்டுக் குளிர்காலத்தில், மோசமான விளைச்சலின் காரணமாகத் தானியங்கள், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, இன்னும் இவைபோன்ற மிகவும் இன்றியமையாத பிழைப்பாதாரப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துவிட்டது. தொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக முன்போலவே இன்னும் அதே பணத் தொகையைப் பெறுகின்றனர் என வைத்துக்கொள்வோம். அவர்களுடைய கூலி குறைந்து விடவில்லையா? நிச்சயமாகக் குறைந்துவிட்டது. அதே அளவு பணத்தைக் கொடுத்துக் குறைவான ரொட்டியும், இறைச்சியும், பிறவும் பெற்றனர். தொழிலாளர்களின் கூலி குறைந்தது, வெள்ளியின் மதிப்புக் குறைவாக இருந்த காரணத்தால் அல்ல, பிழைப்பாதாரப் பொருள்களின் மதிப்பு ஏறிவிட்ட காரணத்தால்.
முடிவாக, புதிய எந்திரங்களை ஈடுபடுத்தியது, சாதகமான பருவநிலை, இன்னும் இவைபோன்ற காரணங்களால் அனைத்து விவசாயப் பண்டங்கள், தொழில் உற்பத்திப் பண்டங்கள் ஆகியவற்றின் விலை குறைந்துவிட, உழைப்புச் சக்தியின் பணவிலை அப்படியே இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதே அளவு பணத்துக்குத் தொழிலாளர்கள் இப்பொழுது அனைத்துவகைப் பண்டங்களையும் முன்னிலும் அதிகமாக வாங்க முடிகிறது. ஆக, கூலியின் பணமதிப்பு மாறாத காரணத்தால் அவர்களுடைய கூலி உயர்ந்துவிடுகிறது.
எனவே, உழைப்புச் சக்தியின் பணவிலை, அதாவது பெயரளவான கூலி, உள்ளபடியான அல்லது உண்மையான கூலியைக் குறிப்பதில்லை. அதாவது, கூலிக்குப் பரிவர்த்தனையாக உள்ளபடியே தரப்படும் பண்டங்களின் அளவைக் குறிப்பதில்லை. ஆகவே கூலியின் உயர்வு அல்லது வீழ்ச்சி பற்றிப் பேசும்போது, உழைப்புச் சக்தியின் பணவிலையை அதாவது பெயரளவான கூலியை மட்டுமின்றி, உண்மையான கூலியையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், பெயரளவான கூலி, அதாவது தொழிலாளி தன்னை முதலாளியிடம் விற்றுக்கொள்ளும் பணத்தின் அளவு, அல்லது உண்மையான கூலி, அதாவது இந்தப் பணத்துக்குத் தொழிலாளி வாங்க முடிகிற பண்டங்களின் அளவு, இவையிரண்டில் எதுவுமே கூலி என்ற சொல்லில் உள்ளடங்கியுள்ள உறவுகளை முழுமையாக விளக்கிவிடவில்லை.
கூலியானது, அனைத்துக்கும் மேலாக, முதலாளிக்குக் கிடைக்கும் ஆதாயத்துடன், அதாவது இலாபத்துடன் அதற்குள்ள உறவால் நிர்ணயிக்கப்படுகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், கூலி என்பது வீதப்படியான, ஓர் ஒப்பீட்டு அளவாகும்.
உண்மையான கூலி, பண்டங்களின் விலையுடனான ஒப்பீட்டில், உழைப்புச் சக்தியின் விலையைத் தெரிவிக்கிறது. மறுபுறம் ஒப்பீட்டுக் கூலியோ, திரட்டி வைக்கப்பட்ட உழைப்பில் சேரும் அதன் பங்குடன், அதாவது மூலதனத்தோடு சேரும் அதன் பங்குடனான ஒப்பீட்டில், நேரடி உழைப்பின் பங்கினை, உழைப்பால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மதிப்பில் தெரிவிக்கிறது.
அடுத்த பகுதி: கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி
முந்தைய பகுதி: மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும்