வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி
கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
“உங்களுக்குக் கிடைக்கும் கூலி எவ்வளவு?” என்று பல தொழிலாளர்களிடம் கேட்டால், ஒருவர் ”எனக்கு ஒரு ஷில்லிங் கிடைக்கிறது” என்றும், இன்னொருவர் “எனக்கு இரண்டு ஷில்லிங் கிடைக்கிறது” என்றும் பலவகையாகப் பதில் அளிப்பர். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதற்குத் தத்தம் முதலாளிகளிடமிருந்து பெறுகின்ற கூலியாக அவர்கள் வேலை செய்யும் தொழில்துறையின் வெவ்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு தொகையைக் குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக, ஒரு கஜம் துணி நெய்வதற்காக அல்லது ஓர் அச்சுப் படிவத்துக்கு வேண்டிய அச்சுகளைக் கோப்பதற்காக எனக் குறிப்பிடலாம். இவர்களின் கூற்றுகள் பலவிதமாக இருப்பினும், ஒரு விஷயம் குறித்து இவர்கள் அனைவரும் உடன்படுவர்: குறிப்பிட்ட வேலைநேரத்துக்காக அல்லது குறிப்பிட்ட அளவு வேலைக்காக முதலாளி வழங்கும் பணத்தொகையே கூலி ஆகும்.
இதிலிருந்து, முதலாளி பணம்கொடுத்து இவர்களின் உழைப்பை வாங்குவதாகவும், பணத்துக்காக இவர்கள் தம் உழைப்பை முதலாளிக்கு விற்பதாகவும் தோன்றுகிறது. ஆனால் இது வெறும் பொய்த்தோற்றமே ஆகும். உண்மையில், தொழிலாளர்கள் பணத்துக்காக முதலாளியிடம் விற்பது அவர்களின் உழைப்புச் சக்தியை. இந்த உழைப்புச் சக்தியை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்பதுபோல [ஒரு கால அளவுக்கு] முதலாளி விலைக்கு வாங்குகிறார். இவ்வாறு உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கியபின், குறிப்பிட்ட அந்தக் கால அளவுக்குத் தொழிலாளியை வேலை செய்ய வைப்பதன்மூலம், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார். தொழிலாளியின் உழைப்புச் சக்தியை முதலாளி வாங்கிய அதே பணத்துக்கு (எடுத்துக்காட்டாக இரண்டு ஷில்லிங்), அவர் குறிப்பிட்ட அளவு சர்க்கரையை வாங்கியிருக்கலாம் அல்லது வேறொரு பண்டத்தை வாங்கியிருக்கலாம். இரண்டு ஷில்லிங் கொடுத்து 20 பவுண்டு சர்க்கரை வாங்கியிருப்பின், அந்த இரண்டு ஷில்லிங், 20 பவுண்டு சர்க்கரையின் விலை ஆகிறது. 12 மணிநேரப் பயன்பாட்டுக்கென உழைப்புச் சக்தியை வாங்க அவர் கொடுத்த இரண்டு ஷில்லிங், 12 மணிநேர உழைப்புக்கான விலை ஆகும். ஆக, உழைப்புச் சக்தியும் சர்க்கரையைப் போன்றே சற்றும் கூடக்குறைவின்றி ஒரு பண்டமே ஆகும். முன்னது கடிகாரத்தின்மூலம் அளக்கப்படுகிறது, பின்னது தராசுமூலம் அளக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தங்கள் பண்டமாகிய உழைப்புச் சக்தியை முதலாளியின் பண்டத்துக்காக அதாவது பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்கின்றனர். இந்தப் பரிவர்த்தனை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் நடைபெறுகிறது. இவ்வளவு நேரம் உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள இவ்வளவு பணம் என்பதாக. 12 மணிநேர நெசவுக்கு இரண்டு ஷில்லிங் என்போம். இந்த இரண்டு ஷில்லிங் என்பது, இரண்டு ஷில்லிங்குக்கு நான் வாங்கக்கூடிய பிற பண்டங்கள் அனைத்தையும் குறிப்பிடுகிறது அல்லவா? ஆகவே, உண்மையில் தொழிலாளி தம் பண்டமாகிய உழைப்புச் சக்தியை அனைத்து வகையான பண்டங்களுக்காகவும் பரிவர்த்தனை செய்துகொள்கிறார். தவிரவும், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் பரிவர்த்தனை செய்து கொள்கிறார். முதலாளி தொழிலாளிக்கு இரண்டு ஷில்லிங் கொடுப்பதன்மூலம், அவரின் ஒருநாள் உழைப்புக்குப் பதிலாகக் கொஞ்சம் இறைச்சியும், கொஞ்சம் துணிமணியும், கொஞ்சம் விறகும், விளக்கு வெளிச்சமும், இன்ன பிறவும் தந்துள்ளார். எனவே, இரண்டு ஷில்லிங் என்பது பிற பண்டங்களுக்காக உழைப்புச் சக்தியைப் பரிவர்த்தனை செய்துகொள்ளும் விகிதத்தைக் குறிக்கிறது. அதாவது, உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைக் குறிக்கிறது.
பணத்தில் கணக்கிடப்படும் ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அப்பண்டத்தின் விலை எனப்படுகிறது. எனவே, கூலி என்பது உழைப்புச் சக்தியின் விலையைக் குறிக்கும் ஒரு தனிச்சிறப்பான பெயராகும். பொதுவாக, இது உழைப்பின் விலை என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் சதையையும் குருதியையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத இந்தத் தனித்துவம் கொண்ட பண்டத்தின் [உழைப்புச் சக்தியின்] விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி.
யாரேனும் ஒரு தொழிலாளியை எடுத்துக் கொள்வோம். எடுத்துக்காட்டாக, ஒரு நெசவாளியை எடுத்துக் கொள்வோம். முதலாளி இவருக்குத் தறியும் நூலும் தருகிறார். நெசவாளி வேலையில் ஈடுபடுகிறார். நூல் துணியாக மாற்றப்படுகிறது. முதலாளி இந்தத் துணியைத் தன்வசமாக்கிக் கொண்டு அதனை விற்கிறார். 20 ஷில்லிங்குக்கு விற்பதாகக் கொள்வோம். இப்போது நெசவாளிக்குக் கிடைக்கும் கூலியானது துணியில் ஒரு பங்கா? 20 ஷில்லிங்கில் ஒரு பங்கா? அவருடைய உழைப்பில் உருவான பொருளில் ஒரு பங்கா? இல்லவே இல்லை. துணி விற்கப்படுவதற்குப் பல நாட்கள் முன்பே, அனேகமாக அது நெய்து முடிக்கப்படுவதற்குப் பல நாட்கள் முன்பே, நெசவாளி தன் கூலியைப் பெற்றுக் கொண்டுவிடுகிறார். அதாவது, முதலாளி இந்தத் துணியின்மூலம் தாம் பெறப்போகும் பணத்திலிருந்து நெசவாளியின் கூலியைத் தரவில்லை. ஏற்கெனவே தம் கையிருப்பிலுள்ள பணத்திலிருந்துதான் தருகிறார். தறியும் நூலும் முதலாளி நெசவாளிக்குத் தந்தவையே தவிர, நெசவாளி உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல. அதுபோலவே, நெசவாளி தன் பண்டமாகிய உழைப்புச் சக்திக்குப் பரிவர்த்தனையாகப் பெற்றுக்கொள்ளும் பண்டங்களும் அவர் உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல. முதலாளி விற்கும் துணியை வாங்குவதற்கு ஒருவர்கூட இல்லாமல் போகலாம். முதலாளிக்குத் துணியின் விற்பனையிலிருந்து கூலியின் தொகைகூடக் கிடைக்காமல் போகலாம். நெசவாளியின் கூலியோடு ஒப்பிடுகையில் மிகவும் இலாபகரமாக முதலாளி துணியை விற்பதும் சாத்தியமே. ஆனால், இவற்றோடெல்லாம் நெசவாளிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. முதலாளி தம்மிடம் ஏற்கெனவே உள்ள செல்வத்தின் அதாவது தமது மூலதனத்தின் ஒரு பகுதியைக் கொண்டு நெசவாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகிறார். தம் செல்வத்தின் பிறிதொரு பகுதியைக் கொண்டு மூலப்பொருளான நூலையும் உழைப்புக் கருவியாகிய தறியையும் எப்படி அவர் விலைக்கு வாங்கியுள்ளாரோ முற்றிலும் அதே முறையில்தான் நெசவாளியின் உழைப்புச் சக்தியையும் வாங்குகிறார். துணியின் உற்பத்திக்குத் தேவையான உழைப்புச் சக்தி உட்பட இவை அனைத்தையும் வாங்கியபின் முதலாளி தமக்குச் சொந்தமான மூலப் பொருள்களையும் உழைப்புக் கருவிகளையும் மட்டுமே கொண்டு துணியை உற்பத்தி செய்கிறார். ஏனெனில், நமது அருமை நெசவாளியும் இந்த உழைப்புக் கருவிகளுள் ஒரு கருவியாகவே இருக்கிறார். இந்த வகையில் நெசவாளியும் தறியைப் போலவேதான். உற்பத்திப் பொருளிலோ (துணி), அப்பொருளுக்குக் கிடைக்கும் விலையிலோ தறிக்குக் கிடைக்கும் பங்கைவிட[!] நெசவாளிக்குக் கூடுதலான பங்கு எதுவும் இல்லை.
ஆக, கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
இவ்விதமாக, உழைப்புச் சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு பண்டமாகும். ஏன் அவர் அதை விற்கிறார்? உயிர் வாழ்வதன் பொருட்டு.
ஆனால், உழைப்புச் சக்தியைச் செயலாக்குவது அதாவது வேலையில் ஈடுபடுவது தொழிலாளியினுடைய சொந்த உயிரின் துடிப்பான வெளிப்பாடாகும். அவருக்குத் தேவையான பிழைப்பாதாரப் பொருள்களைப் பெறும்பொருட்டு, இந்த உயிர்ச் செயல்பாட்டை அவர் வேறொரு நபருக்கு விற்கிறார். எனவே, அவருடைய உயிர்ச் செயற்பாடு என்பதே அவர் தன் சொந்தப் பிழைப்பை நடத்துவதற்கான ஒரு வழிமுறையே ஆகும். தன்னை உயிரோடு வைத்துக் கொள்ளவே வேலை செய்கிறார். உழைப்பையேகூட அவர் தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. சொல்லப்போனால் அவருடைய வாழ்வின் தியாகமாகவே கருதலாம். உழைப்பு என்பது அவர் வேறொருவருக்குக் கூவி விற்றுவிட்ட ஒரு பண்டமாகும். எனவே, அவருடைய செயல்பாட்டில் உற்பத்தியான பொருள் அவருடைய செயல்பாட்டின் குறிக்கோள் அல்ல. அவர் தனக்காக உற்பத்தி செய்வது, அவர் நெய்யும் பட்டல்ல, சுரங்கத்தின் ஆழ்குழியில் அவர் வெட்டியெடுக்கும் தங்கம் அல்ல, அவர் கட்டியெழுப்பும் மாளிகை அல்ல. அவர் தனக்காக உற்பத்தி செய்வது கூலி மட்டுமே. [அவர் உற்பத்தி செய்யும்] பட்டும், தங்கமும், மாளிகையும், வாழ்க்கைத் தேவைகளான குறிப்பிட்ட அளவுள்ள சில பொருள்களாக அவருக்கென உருமாற்றம் பெற்றுக் கிடைகின்றன. அவை அனேகமாக பருத்தியாலான ஒரு கோட்டு, சில செப்புக் காசுகள், தரைகீழ்த் தளத்தில் ஓர் உறைவிடமாக இருக்கலாம். மேலும் தொழிலாளி 12 மணிநேரம் தொடர்ந்து நெய்கிறார், நூற்கிறார், துளையிடுகிறார், கடைகிறார், கட்டடம் கட்டுகிறார், மண் வெட்டுகிறார், கல் உடைக்கிறார், சுமை தூக்குகிறார், இன்னபிற வேலையைச் செய்கிறார். இந்த 12 மணிநேர நெய்தல், நூற்றல், துளைத்தல், கடைதல், கட்டுதல், மண்வெட்டல், கல் உடைத்தல் வேலையைத் தொழிலாளி தன் வாழ்வின் புலப்பாடாக, தன் வாழ்வாகக் கருதுகிறாரா? இல்லை, நிலைமை முற்றிலும் நேர்மாறானது. இந்தச் செயல்பாடு முடிவடைந்த பிறகுதான் அவருக்குச் சாப்பாட்டு மேஜையில், மது விடுதியில், படுக்கையில் வாழ்வு தொடங்குகிறது. இன்னொரு புறம், இந்த 12 மணிநேர வேலை என்பது அவரைப் பொறுத்தவரை நெய்தல், நூற்றல், துளைத்தல் என்றெல்லாம் அர்த்தப்படவில்லை. சாப்பாட்டு மேஜைமுன் உட்கார, மது விடுதியில் தனக்கு இருக்கை பெற, ஒரு படுக்கையில் படுத்துறங்க – இவற்றை அவருக்குப் பெற்றுத் தருகிற ஊதியம் என்று மட்டுமே அர்த்தப்படுகிறது. பட்டு நூலை உருவாக்குவதில் பட்டுப்புழுவின் நோக்கம், புழுவாகவே தன் இருப்பை நீட்டிக்கத்தான் என்று இருக்குமாயின், கூலித் தொழிலாளி என்பதற்குப் பட்டுப்புழு மிகவும் பொருத்தமான ஓர் எடுத்துக்காட்டாய் ஆகிவிடும்.
உழைப்புச் சக்தி எல்லாக் காலங்களிலும் ஒரு பண்டமாக இருக்கவில்லை. உழைப்பு எல்லாக் காலங்களிலும் கூலியுழைப்பாக அதாவது சுதந்திர உழைப்பாக இருக்கவில்லை. அடிமை தன் உழைப்புச் சக்தியை அடிமையுடைமையாளருக்கு விற்கவில்லை – காளைமாடு தன் உழைப்பை விவசாயிக்கு விற்பதில்லை, அதுபோல. அடிமை, அவனுடைய உழைப்புச் சக்தியோடு சேர்த்து, உடைமையாளனுக்கு என்றைக்குமாய் விற்கப்பட்டுவிட்டான். அடிமை என்பவன் ஓர் உடைமையாளன் கையிலிருந்து இன்னொருவன் கைக்கு மாறிச் செல்லக்கூடிய ஒரு பண்டம். அவனே ஒரு பண்டம். ஆனால் அவனுடைய உழைப்புச் சக்தி அவனுடைய பண்டமாக இல்லை. பண்ணையடிமையோ தன் உழைப்புச் சக்தியில் ஒருபகுதியை மட்டுமே விற்கிறான். [உண்மையில் ’விற்கிறான்’ என்ற சொல் இங்கு பொருந்தாது. காரணம், பண்ணையடிமைக்கும் நிலவுடைமையாளனுக்கும் இடையே விற்பது, வாங்குவது என்கிற உறவு கிடையாது. பண்ணையடிமை தன் கப்பத்தை உழைப்பாகவும், பொருளாகவும் நிலவுடையாளனுக்குத் தருகிறான். ‘பதிலீடாகத் தருகிறான்’ என்கிற பொதுவான பொருளிலிலேயே ’விற்கிறான்’ என்ற சொல்லை மார்க்ஸ் பயன்படுத்தியுள்ளார் என்பதை அடுத்த வாக்கியம் தெளிவுபடுத்தும்]. நிலத்தின் உடைமையாளனிடமிருந்து அவன் கூலி பெறுவதில்லை; சொல்லப் போனால் நிலத்தின் உடைமையாளன்தான் அவனிடமிருந்து கப்பம் பெறுகிறான். பண்ணையடிமை நிலத்துக்கு உரித்தானவன். நிலத்தின் விளைச்சலை அவன் அந்நிலத்தின் உடைமையாளனிடம் ஒப்படைக்கிறான். சுதந்திரத் தொழிலாளியோ அவ்வாறில்லாமல், தன்னையே விற்கிறான். அதுவும் சிறுகச் சிறுக விற்கிறான். ஒவ்வொரு நாளும் தன்னுடைய 8, 10, 12, 15 மணிநேர வாழ்க்கையை அதிக விலை தருபவர்க்கு விற்கிறான். மூலப்பொருள்கள், உழைப்புக் கருவிகள், வாழ்க்கைச் சாதனங்கள் இவற்றின் உடைமையாளருக்கு அதாவது முதலாளிக்கு விற்கிறான். தொழிலாளி ஓர் உடைமையாளருக்கோ, நிலத்துக்கோ உரித்தானவன் இல்லை. ஆனால், அவனுடைய 8, 10, 12, 15 மணிநேர அன்றாட வாழ்க்கை அதை எவர் விலைகொடுத்து வாங்கினாலும் அவருக்கு உரித்தாகின்றது. தொழிலாளி தன்னை விற்றுக் கொண்ட முதலாளியிடமிருந்து விலகுவதும், இன்னொரு முதலாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அடிக்கடி நிகழ்கிறது. அதேபோல முதலாளியும் தொழிலாளியைத் தகுதியானவன் என்று கருதும்போது சேர்த்துக் கொள்வதும், அவனால் இனி எதுவும் பயனில்லை அல்லது உகந்த பயனில்லை என்று கருதும்போது, அவனை வேலையிலிருந்து தூக்கிவிடுவதும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், தன் உழைப்புச் சக்தியை விற்பதே வருமானத்துக்கான ஒரே ஆதாரமாகக் கொண்டுள்ள தொழிலாளி, ஒட்டுமொத்த வாங்கும் வர்க்கத்திடமிருந்து அதாவது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விலகிவிட முடியாது. தன் சொந்தப் பிழைப்பையே உதறித் தள்ளினால் ஒழிய, அது நடக்காது. தொழிலாளி எந்தவொரு தனி முதலாளிக்கும் உரியவன் அல்ல. அவன் முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரித்தானவன். தன் முதலாளியை அவன் தேடிக்கொள்ள வேண்டும். அதாவது இந்த முதலாளித்துவ வர்க்கத்தினினுள் தன்னை வாங்கிக் கொள்ளும் ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும்.
மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் உள்ள உறவுபற்றி மேலும் நெருங்கிச் சென்று ஆராயப் புகுமுன், கூலியை நிர்ணயிப்பதில் நம் கவனத்துக்கு வருகின்ற மிகவும் பொதுப்படையான நிலைமைகளைச் சுருக்கமாக இனி எடுத்துரைப்போம்.
நாம் மேலே கண்டவாறு, கூலி என்பது குறிப்பிட்ட ஒரு பண்டத்தின், அதாவது உழைப்புச் சக்தியின் விலை ஆகும். எனவே, ஏனைய பிற பண்டங்களின் விலையை நிர்ணயிக்கும் அதே விதிகள்தாம் கூலியையும் நிர்ணயிக்கின்றன. ஆக, ஒரு பண்டத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இங்குள்ள கேள்வி.